Posted in

வம்பிழுத்த இலங்கை அணியை வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி;11 பந்துகளில் உலக சாதனை

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியின் 15 வயது இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்றுச் சிறப்புமிக்க ருத்ரதாண்டவத்தை ஆடியுள்ளார். டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முந்தைய போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் விமர்சனங்களைச் சந்தித்த சூர்யவன்ஷி, இறுதிப் போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். வெறும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி, 50 ஓவர் (List A) கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைத் தன்வசப்படுத்தினார்.

இந்த வார தொடக்கத்தில் டம்புள்ளாவில் நடைபெற்ற லீக் போட்டியின் போது இலங்கை ஏ அணியிடம் இந்திய அணி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியின் போது இலங்கை வீரர் விஷேன் ஹலம்பாகே, சூர்யவன்ஷியை வம்பிழுத்து ஸ்லெட்ஜிங் (Sledging) செய்ததாகவும், “மேட்ச் முடிந்தது, வீட்டிற்கு போ” என கிண்டலடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே களத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. தனக்கு நேர்ந்த இந்த அவமானத்திற்கு பேட்டால் பழிவாங்கக் காத்திருந்த சூர்யவன்ஷி, இறுதிப் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் முகமது சிராஸ் வீசிய பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசி சூர்யவன்ஷி அதிரடி காட்டினார். லீக் போட்டியில் வம்பிழுத்த இலங்கை வீரர்களுக்கு மரண பயத்தைக் காட்டிய அவர், மொத்தம் 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துரதிர்ஷ்டவசமாக வெறும் 6 ரன்களில் உலக சாதனை சதத்தை தவறவிட்ட போதிலும், அவரின் இந்த ‘காட்டடி’ ஆட்டம் இந்திய அணிக்கு இமாலய ரன் குவிப்புக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

இதற்குமுன், கடந்த 2005-06 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போட்டியில் கௌசல்யா வீரரத்னே 12 பந்துகளில் அடித்த அரைசதமே உலக சாதனையாக இருந்தது. தற்போது 20 வருட கால சாதனையை இந்த 15 வயது இந்திய சிறுவன் தகர்த்துள்ளார். மேலும், இந்திய அளவில் கடந்த சீசனில் சர்பராஸ் கான் பஞ்சாப் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அடித்திருந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிகளிலும் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி, அழுத்தங்கள் நிறைந்த இறுதிப் போட்டிகளில் தான் எப்போதும் ஒரு ‘கிங்’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.