Posted in

ஜேசிபி இறக்கி காவல்நிலையம் வெளியே வாகனங்களை அப்புறப்படுத்திய பெண் இன்ஸ்பெக்டர்..

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, சட்ட ஒழுங்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் ரோகிணி ஜேசிபி (JCB) இயந்திரம் மூலம் அதிரடியாக அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காவல் நிலையக் கட்டடத்தின் தரைத்தளத்தில் சட்ட ஒழுங்கு பிரிவும், முதல் தளத்தில் குற்றப்பிரிவும், இரண்டாம் தளத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துறையினர் தங்களது வழக்கு தொடர்பான பறிமுதல் வாகனங்களை நீண்ட நாட்களாக வளாகத்திற்குள்ளும் வெளியேயும் நிறுத்தி வைத்திருந்ததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

வளாகத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களை அப்புறப்படுத்துமாறும் ஆய்வாளர் ரோகிணி பலமுறை அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், மற்ற பிரிவினர் வாகனங்களை எடுக்காததால் ஆத்திரமடைந்த அவர், அதிரடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அங்கிருந்த வாகனங்களை அள்ளி அப்புறப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் ரோகிணியுடன் காவல் நிலையத்தின் வெளியேயே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, “இணை ஆணையர் (Joint Commissioner) அல்லது கமிஷனரிடம் யாருடையைடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள்” என ஆய்வாளர் ரோகிணி ஆவேசமாகப் பதிலளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கமளித்த ஆய்வாளர் ரோகிணி, காவல் நிலையங்கள் அனைத்தும் சட்ட ஒழுங்கு ஆய்வாளரின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், இன்னும் ஓரிரு தினங்களில் சென்னை காவல் ஆணையர் (COP) இந்த காவல் நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ள வரவிருப்பதாகவும், இதற்காக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில், அவர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டே இந்த தூய்மைப் பணியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். பறிமுதல் வாகனங்கள் சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருந்ததால் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக அவர் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோக்கள் தங்களுக்குச் சாதகமாகத் தொகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆய்வாளர், தன்னிடம் இருக்கும் முழு வீடியோக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு சாலை எவ்வளவு சீராக மாறியுள்ளது என்பது தெரியும் என்றார். “நான் எனது கடமையைத்தான் செய்தேன், இதில் பயப்பட எதுவும் இல்லை. ஒருவேளை எனது கடமையைச் செய்ததற்காக உயர் அதிகாரிகள் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டித்தாலும், அது குறித்து நான் கவலைப்படப் போவதில்லை” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.