Posted in

பாலிசி பத்தி பேச என்கூட உட்கார முடியுமா? – மேயர் பிரியாவிற்கு தவெக அமைச்சர் கீர்த்தனா சவால்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு எதிர்க்கட்சியான திமுகவிற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 40, 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டவர்கள், வெறும் 30 நாட்களே ஆகியுள்ள தவெக ஆட்சியைப் பார்த்துக் கேள்வி கேட்பதா என்று ஆவேசப்பட்ட அவர், தவெக அரசு கொண்டு வந்துள்ள ‘ஜீரோ கரப்ஷன்’ (Zero Corruption) மாடலால் திமுகவின் 50 ஆண்டுக்கால டெண்டர் மாஃபியா சாம்ராஜ்யம் வெறும் 30 நாட்களில் ஒழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தவெக அரசை ‘ரீல்ஸ் அரசு’ என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் கீர்த்தனா, முந்தைய திமுக ஆட்சியில் முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடுகளுக்குக் குடும்பம் குடும்பமாகச் சொகுசு சுற்றுலா சென்றதாகச் சாடினார். “கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தொழில்துறைக்கு என்று ஒரு ‘ஆக்டிங் மினிஸ்டர்’ (அமைச்சரின் தம்பி) இருந்தார்; அவர் செய்த கமிஷன் மற்றும் லஞ்சக் கெடுபிடிகளால் 25 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறின. இதன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளும், நமது தமிழ்நாட்டு இளைஞர்களின் 2 லட்சம் வேலைவாய்ப்புகளும் பறிபோயின. ஆனால், இன்று நான் போட்ட ஒரு இன்வெஸ்ட்மெண்ட் வீடியோவை பார்த்துவிட்டு வெளிநாட்டு சிஇஓ-க்களே வியந்து பாராட்டும் நிலையை உருவாக்கியுள்ளோம்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை மேயரும் தற்போதைய திமுக நிர்வாகியுமான பிரியாவின் விமர்சனங்களுக்குச் சாட்டையடி கொடுத்த அமைச்சர், “சென்னை மேயர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, மற்றவர்களின் கார்களைப் பிடித்துத் தொங்கிச் சென்றதும், குடை பிடித்து நின்றதும் தான் உங்கள் சாதனையா? எங்களைப் பற்றி உருவக் கேலி செய்வதையும், தரம் தாழ்ந்து விமர்சிப்பதையும் விட்டுவிட்டு, தைரியம் இருந்தால் பாலிசி (Policy) மற்றும் கொள்கை ரீதியாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க மேடைக்கு வர முடியுமா?” என்று சென்னை முன்னாள் மேயர் பிரியாவிற்குப் பகிரங்க சவால் விடுத்தார். 70 ஆண்டுகளாகப் பெண்கள் முன்னேற்றம் என்று ஏமாற்றியவர்களுக்கு மத்தியில், சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாகச் சட்டமன்றச் செயலாளராக ஒரு பெண்ணை அமர வைத்ததுடன், தவெக அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்களுக்கு அதிகாரம் கொடுத்து அழகு பார்த்தவர் முதலமைச்சர் விஜய் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தவெக அரசு 30 நாட்களில் செய்துள்ள வரலாற்றுச் சாதனைகளைப் பட்டியலிட்ட அமைச்சர் கீர்த்தனா, தகுதியுள்ள குடும்பங்களுக்கு ‘200 யூனிட் இலவச மின்சாரம்’, பெண்கள் பாதுகாப்பிற்காகச் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’, பள்ளிகள் மற்றும் கோயில்கள் அருகே இருந்த ‘717 டாஸ்மாக் கடைகள் மூடல்’, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் ‘38,000 கோடி மதிப்பிலான தூத்துக்குடி ஹூண்டாய் கப்பல் திட்டம்’, விவசாயிகளுக்கு ‘6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி’ மற்றும் மேகதாது அணைக்கு எதிரான ஒருமனதான தீர்மானம் ஆகியவற்றை முத்திரைச் சாதனைகளாக விவரித்தார். “திரையில் ஹீரோவாக இருப்பது எளிது, ஆனால் மக்களின் உண்மையான ஹீரோவாக வாழும் நமது அண்ணன் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை ஏழை எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்து கொண்டாடுவோம்” எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.