சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் (Bailable Warrant) பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததைக் கண்டித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அப்போதைய அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவப் பண்பாடுகள் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்ட பலர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை ஜார்ஜ் டவுனில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பலமுறை சம்மன் அனுப்பிய போதிலும், அவர் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத பொன்முடிக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
மேலும், அவரைக் கைது செய்தோ அல்லது பிணையில் ஆஜர்படுத்தியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பொன்முடிக்கு எதிரான சட்டப் போராட்டமும் அரசியல் நெருக்கடியும் மேலும் தீவிரமடைந்துள்ளது.