Posted in

நடிகன் கட்சியா? – சட்டமன்றத்தில் சீறிய முதலமைச்சர் விஜய்;ஆடிப்போன சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசை “நடிகன் கட்சி” என்றும், சினிமா கவர்ச்சியால் மட்டுமே ஆட்சியைப் பிடித்துள்ளனர் என்றும் விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகளுக்குச் சட்டமன்றத்தில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் விஜய். “பொதுவாக எல்லாரும் கட்சி ஆரம்பித்துவிட்டுதான் மக்களின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போவார்கள். ஆனால், நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் மக்களின் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக நுழைந்ததற்குப் பிறகுதான் கட்சியையே ஆரம்பித்தோம். தமிழ்நாட்டு மக்களின் மனசுக்குள் போவதற்கு நாங்கள் பட்ட பாடு எங்களுக்கு மட்டும்தான் தெரியும்” என்று உணர்ச்சிப்பொங்கப் பேசினார்.

அரசியல் பயணம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் (Transparent) தொடங்கியதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், தவெக-வின் அசுர தேர்தல் வெற்றிக்கான புள்ளிவிவரங்களையும் அவையில் முழங்கினார். “இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு பெரிய கூட்டணியும் இல்லாமல் தவெக தனித்துப் போட்டியிட்டது. தமிழக மக்கள் எங்களை முழுமையாகப் புரிந்து கொண்டதாலும், தவெக தோழர்களின் அயராத உழைப்பாலும் 35 சதவீத வாக்குகளைப் பெற்றோம். ஒட்டுமொத்தமாக 1 கோடியே 72 லட்சம் வாக்குகளை வாரிக்குவித்து தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக, மக்களின் பேராதரவோடு இன்று ஆளுங்கட்சியாக இந்தச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம்” என்று கம்பீரமாகத் தெரிவித்தார்.

தவெக கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளிலேயே அசுர வேகத்தில் ஆட்சிக்கட்டிலில் ஏறியதைக் கிண்டல் செய்தவர்களுக்குப் பதிலளித்த அவர், இந்த குறுகிய காலப் பயணத்தில் சந்தித்த வலியும் வேதனையும் சாதாரணமானது அல்ல என்றார். “நாங்கள் இரண்டே கால் வருஷத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று சிலர் கிண்டலாகப் பேசுகிறார்கள். ஆனால், இந்தத் பயணத்தில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிபந்தனைகள், நெருக்கடிகள், கட்டுப்பாடுகள் மற்றும் சூழ்ச்சிகள் ஊர் உலகத்தில் யாருக்கும் இல்லாத ஒன்று. எங்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்குப் போதுமான பாதுகாப்பு தராமல், எங்களை முடக்க நினைத்த பல திரைமறைவு சூழ்ச்சிகளைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம்” எனத் தனது அரசியல் போராட்டங்களை விவரித்தார்.

தனது உரையின் உச்சகட்டமாக, கரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விபத்தில் உயிரிழந்த 41 தவெக தொண்டர்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் மிகுந்த வேதனைப்பட்டார். “எங்கள் பயணத்தில் ஏற்பட்ட எல்லாத் துயரங்களுக்கும் உச்சமாக, கரூரில் தவெக சொந்தங்கள் 41 பேரை இழந்த வேதனை என் மனதை விட்டு என்றும் நீங்காது. அந்தப் பேரழிவிற்கு எங்களுக்கே பாதுகாப்பு தராமல், அரசியல் கொடூரத்தின் உச்சமாக ஒட்டுமொத்தப் பழியையும் எங்கள் மீதே தூக்கிப் போட்டார்கள். அரசியல் இவ்வளவு கொடூரமாக இருக்க வேண்டுமா? இத்தனை தடைகளையும் இழந்த உயிர்களின் வலியையும் சுமந்துதான் மக்கள் பணியாற்றி வருகிறோம், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது (Miles to go)” என்று ஆவேசத்துடன் பேசித் தனது உரையை நிறைவு செய்தார்.