மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக தொழிலதிபர் ஜேப்பியார் இருந்தது போல, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்க்குத் தான் என்றென்றும் பக்கபலமாக இருப்பேன் என்று நிதி அமைச்சர் நா. மரிய வில்சன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசின் வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்து பேசிய அவர், முதல்வர் விஜய் குறித்துப் பகிர்ந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.
ஜெப்பியார் கல்வி குழுமத்தின் தலைவரும், மறைந்த ஜேப்பியாரின் மருமகனுமான முனைவர் நா. மரிய வில்சன், தவெகவில் இணைந்து சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். தவெக ஆட்சியில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவர், சட்டமன்ற பட்ஜெட் உரையின் போது பேசுகையில், “முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திலும் ஆட்சிக் காலத்திலும் அவருக்கு நிழலாகவும், பெரும் பலமாகவும் விளங்கியவர் ஜேப்பியார். அதேபோல, தமிழக மக்களுக்காகப் பணியாற்ற வந்துள்ள முதல்வர் விஜய்க்கு நான் ஒரு உண்மையுள்ள தளபதியாகச் செயல்படுவேன் என்று அவரிடமே நேரில் உறுதியளித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், முதல்வர் விஜய்யை ஒரு ‘உண்மையான ஜனநாயக நாயகன்’ என்று புகழ்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், தனக்கு வாக்களித்து உயர்த்திய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே அவர் முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்கள் மற்றும் மொழிரீதியான கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், தங்களது அரசின் ஒரே நோக்கம் மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டுமே என்றும், அதற்குத் தன் அமைச்சரவை எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர் – ஜேப்பியார் கூட்டணி மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகக் கருதப்படும் நிலையில், அதே பாணியில் முதல்வர் விஜய்யுடன் தனக்கு இருக்கும் நட்பையும், அரசியல் விசுவாசத்தையும் அமைச்சர் மரிய வில்சன் வெளிப்படுத்தியுள்ளது தவெக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்தித் துணுக்குகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.