தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான அனல் பறக்கும் விவாதங்களால் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அவையில் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் அடுத்தடுத்துக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்து வந்தனர். இதற்கு முந்தைய உரைகளில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்திருந்த முதலமைச்சர் விஜய், இம்முறை முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த காலத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் செய்த அதே சைகையை (Action) சட்டமன்றத்திற்குள் செய்து காட்டி அவையையே அதிர வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடுமையான இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாக உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது அறிவாலயத்திலிருந்து காரில் ஏறிப் புறப்பட்ட மு.க. ஸ்டாலின், செய்தியாளர்களை நோக்கித் தனது கையால் “எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் பினிஷ்” என்று ஒரு குறிப்பிட்ட சைகையைக் காட்டியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நீண்ட நாட்கள் ட்ரெண்டாக இருந்தது. தற்போதைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதே “ஆல் பினிஷ்” ஆக்ஷனை முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சி வரிசையைப் பார்த்துச் செய்து காட்டியுள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் தவெக அரசுக்கு இன்னும் நிர்வாக முதிர்ச்சி வரவில்லை என்றும், தேர்தல் கொண்டாட்ட மனநிலையிலேயே இன்னும் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய முதலமைச்சர் விஜய், நாங்கள் மக்களின் பேராதரவோடு 35 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தான் தனிப்பெரும் கட்சியாக இங்கே கம்பீரமாக ஆளுங்கட்சியாக உட்கார்ந்திருக்கிறோம் என்றார். மேலும், “கடந்த கால ஊழல்களின் ஓட்டைகளை நாங்கள் படிப்படியாக அடைத்து வருகிறோம். எங்களை முடக்க நினைத்தவர்களின் அரசியல் கணக்குகள் எல்லாவற்றையும் மக்கள் துணையோடு முடித்துவிட்டோம்” என்று கூறி, மு.க.ஸ்டாலினின் அதே பாணி சைகையைக் காட்டி “யாராக இருந்தாலும் ஆல் பினிஷ்” என அதிரடியாக முழங்கினார்.
முதலமைச்சரின் இந்தத் திடீர் சைகை மற்றும் அதிரடிப் பேச்சால் சட்டமன்ற வளாகமே சில நிமிடங்கள் பரபரப்பில் ஆழ்ந்தது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி, அவர்களின் சொந்தத் தலைவரின் பாணியிலேயே சைகை காட்டி விஜய் முறியடித்த விதம் தவெக தொண்டர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சினிமா பாணியைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்க முதலமைச்சர் விஜய் பழகிவிட்டார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு தற்போதைய கோட்டை வட்டாரத்தின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.