திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள ‘சென்ட் பீட்டர்ஸ் அண்ட் பால்’ (St Peter’s Paul Seafoods Exports Private Limited) என்ற தனியார் இறால் மற்றும் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்திட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவினர், விபத்துக்கான காரணங்கள் குறித்த தங்களின் முதற்கட்ட இடைக்கால அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சரிடம் தற்பொழுது தாக்கல் செய்துள்ளனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட வால்வு பழுது (Valve failure) காரணமாக மளமளவென வெளியேறிய அமோனியா விஷ வாயுவை சுவாசித்ததால், அங்கு பணியில் இருந்த 60 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 64-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூக்கு, வாயில் இரத்தம் கசிந்து மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமான் (19), மலோதி (20) ஆகிய இரண்டு இளம் பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனைகளிலும், ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் (ICU) அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சம் நிதியுதவி அறிவித்ததுடன், உடல்களை அரசு செலவிலேயே சொந்த மாநிலத்திற்கு அனுப்பவும் உத்தரவிட்டார். மேலும், விபத்து குறித்து முழுமையாக ஆராய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) உறுப்பினர் செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குனர் ஆகியோரை உள்ளடக்கிய 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தார். அக்குழுவினர் விபத்து நடந்த தொழிற்சாலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் சிறப்பு சிபிஆர்என் (CBRN) மீட்புக் குழுவினருடன் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு, இந்த இடைக்கால அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.
அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், விபத்துக்குக் காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் எனத் தொழிலாளர் நலத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். விபத்து நடந்தவுடன் மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி கே.பி. கார்த்திகேயன் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ். கவிதா ஆகியோரை நேரடியாகக் களமிறக்கி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்ட தவெக அரசு, அடுத்த 3 நாட்களுக்குள் விரிவான இறுதி அறிக்கையைப் பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள அபாயகரமான தொழிற்சாலைகளில் (Hazardous Industries) கூட்டுப் பாதுகாப்புக் தணிக்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாகத் தொழிற்சாலை மேலாண்மை தரப்பைச் சேர்ந்த மோகன், ஜோசப் ஆகிய இருவரைப் போலீஸார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.