தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கடந்த கால ஆட்சிகள் குறித்தும், ஊழல் குறித்தும் சில கதைகளைக் குறிப்பிட்டு திமுக அரசை விமர்சித்ததாகத் தெரிகிறது. முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு, திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான சிவசங்கர் மிகக் கடுமையான மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவசங்கர், “முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு நடிகராகவே நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கள யதார்த்தம் என்னவென்று தெரியாமல், யாரோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை அப்படியே சட்டமன்றத்தில் வந்து படிக்கிறார். சினிமா பாணியில் சட்டமன்றத்தில் இன்று அவர் வசனம் பேசியதுபோல் பேசுவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு என்றும் உதவாது. எனவே, முதலமைச்சர் முதலில் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று அட்வைஸ் செய்யும் தொனியில் சாடினார்.
மேலும், விஜய் பேசிய கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது குடும்பப் பின்னணியை இழுத்து விமர்சித்தார் சிவசங்கர். “அடுத்தவங்க கதையெல்லாம் மேடையில் சொல்கிறீர்களே முதலமைச்சர் விஜய்.. உங்கள் சொந்த அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் உங்களைப் பற்றி முன்பு சொன்ன கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை’ என்று உங்கள் தந்தை பொதுவெளியில் பேசியதை மறந்துவிட்டீர்களா? அடுத்தவர்கள் கதையைப் பேசுவதை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் குடும்பத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிக ஆக்ரோஷமாகத் தாக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சியில் எவ்வித ஊழலும் இல்லை என்றும், இதுவரை நடந்தது எல்லாமே ஊழல் ஆட்சி என்றும் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு முயன்று வருகிறார் என்று குற்றம் சாட்டினார். “எங்கள் மீது ஊழல் புகார் கூறும் நீங்கள், தைரியம் இருந்தால் என் மீது கூட ஒரு வழக்கு போட்டுப் பாருங்கள். நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் இல்லை. இந்திரா காந்தியின் மிசா காலத்தையே பார்த்து எத்தனையோ கைதுகளை எதிர்கொண்ட பாரம்பரியம் மிக்க கட்சி திமுக” என்றும் சிவசங்கர் சவால் விடுத்துள்ளார்.