கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சி காலத்து முறைகேடுகள் மீதான சட்ட நடவடிக்கைகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு மீது சுமார் 634 கோடி ரூபாய் லஞ்ச முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) முறைப்படி வழக்குப் பதிவு (FIR) செய்துள்ளது. தவெக அரசின் இந்த அதிரடி உத்தரவு, தேர்தல் தோல்வியிலிருந்து மீள முயன்று வரும் திமுக தலைமைக்கு மேலும் ஒரு முட்டுக்கட்டையாகவும், பெரும் அரசியல் பின்னடைவாகவும் மாறியுள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் மிகப்பெரிய அளவில் ‘பணம் பெற்றுக் கொண்டு வேலை’ (Cash-for-Jobs) வழங்கும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தை விசாரித்த மத்திய அமலாக்கத்துறை (ED), தகுதிக்கு அப்பாற்பட்டு சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஏறத்தாழ 634 கோடி ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான முக்கிய ஆவண ஆதாரங்களைத் திரட்டியது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு முந்தைய அரசிடம் இருமுறை பரிந்துரைத்தும், அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி இன்பத்துரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவமதிப்பு வழக்கின் பின்னணியிலும், தற்போதைய தவெக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனின் சட்ட ஆலோசனையின் படியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஏ. அருண் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கே.என். நேருவின் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் அவசர முறையீடு செய்து ஜூன் இறுதி வரை மேல்நடவடிக்கைகளுக்குத் இடைக்காலத் தடை ஆணை பெற்றுள்ளனர். இருப்பினும், தவெக அரசு இந்த வழக்கில் தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஊழலுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படத் துணிந்துள்ளதால் கே.என். நேருவிற்குச் சட்டச் சிக்கல் அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுகையில், “அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனும், சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஏற்பட்டு வரும் சட்டம் ஒழுங்கு விமர்சனங்களை திசைதிருப்பவுமே கே.என். நேரு மீது திட்டமிட்டுப் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது; இதைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளனர். ஆனால், “ஊழலற்ற மாடல் ஆட்சி” என்று மார்தட்டி வரும் முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதிப்படி தவறு செய்தவர்கள் மீது தட்டாமல் நடவடிக்கை எடுப்பார் என தவெகவினர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த பெரும் ஊழல் வழக்கு, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளின் தொடர்புகளையும் நோக்கி நகர்வதால், தமிழக அரசியலில் அடுத்தடுத்த கைது படலங்கள் அரங்கேறுமா என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.