நூற்றாண்டு கால வரலாற்றுப் பெருமையும், 1952-ஆம் ஆண்டு முதல் 75 ஆண்டுகால தேர்தல் வரலாற்றையும் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், இதுவரை இல்லாத ஒரு புதிய உலகளாவிய அதிசயம் தவெக ஆட்சியில் அரங்கேறியுள்ளது. சட்டமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஏதோ ‘தங்கமலை ரகசியம்’ போல பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டு வந்த அவையின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும், தற்பொழுது முதன்முறையாக ஒரு நிமிடம் கூடத் துண்டிக்கப்படாமல் முழுமையாக நேரலை (Live Telecast) செய்யப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த அதிரடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும், கடைக்கோடி குடிமகன் மத்தியிலும் விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டு மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2012 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் விழிப்புணர்வுள்ள பொதுமக்கள் சிலர் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடியபோது, அப்போதைய அதிமுக அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டது. பின்னர் 2021 தேர்தல் வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்த திமுக, 2022-இல் நேரலையைத் தொடங்கினாலும் அது வெறும் பெயரளவிலான ‘கண் துடைப்பு’ நாடகமாகவே இருந்தது. ஆளுநர் உரை, பட்ஜெட் மற்றும் முதலமைச்சர், அமைச்சர்களின் உரைகள் மட்டுமே அரசாங்கத்தால் எடிட் (Edit) செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டன. எதிர்க்கட்சிகளின் காரசார விவாதங்கள், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் நேரலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, ஆளுங்கட்சிக்குச் சாதகமான பிம்பம் மட்டுமே ஊடகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோ தொகுப்புகளாக (Capsules) வழங்கப்பட்டு வந்தது பெரும் புகாராக நீடித்தது.
இந்த நிலையில்தான், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, தான் அடிக்கடி கூறும் “வெளிப்படையான நிர்வாகம்” என்ற வார்த்தையைச் சட்டமன்றத்தில் நிஜமாக்கிக் காட்டியுள்ளது. கடந்த ஜூன் 18 அன்று கூட்டத்தொடர் தொடங்கியபோது முழுமையாக நேரலை செய்யப்பட்ட நிலையில், மறுநாள் சில தொழில்நுட்பக் காரணங்களால் துண்டிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பேரவையின் கேள்வி நேரம் முதல் இறுதி நிகழ்வுகள் வரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி ஒரு நொடி கூட இடைவெளியில்லாமல் மக்களின் பார்வைக்கு நேரலையாகக் கொண்டு சேர்க்கப்பட்டது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு விவாதம் பொதுமக்களால் இந்த அளவிற்கு அதிகம் பார்க்கப்பட்டதும், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும் இதுவே முதன்முறை ஆகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெளிப்படைத்தன்மை குறித்துப் பேசிய தவெக அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ அர்ஜுனா, “தாங்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க விரும்புவதாகவும், அதன் வெளிப்பாடே இந்த முழு நேரலை” என்றும் சிலாகித்துள்ளார். அவையின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் கேமராக்களின் வழியே நேரலையாகப் பாய்வதால், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அவையில் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சட்டமன்றத்திற்கு நேரில் சென்று அவையைக் காண முடியாத சாமானிய மக்களின் நீண்டகால ஆசையை, இந்த ‘டிஜிட்டல் புரட்சி’ மூலம் தவெக அரசு நிறைவேற்றியுள்ளதால், தவெகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி விசில்கள் பறக்கின்றன.