தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் பெயரையும், ஆளுங்கட்சியின் செல்வாக்கையும் பயன்படுத்தி தனியார் பள்ளி நிர்வாகங்களை ஏமாற்றி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் திமுக பிரமுகரும், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின்’ நிறுவன தலைவருமான பி.டி. அரசகுமார் (59) சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாகவே பள்ளி கல்வித்துறையில் லஞ்சப் பணம் புகுந்து விளையாடுவதாகப் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இந்த 100 கோடி ரூபாய் இமாலய மோசடி விவகாரம் தற்பொழுது மாநில அரசியலிலும் கல்வி வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளரான இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த பரபரப்பு புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களது பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல், டிடிசிபி (DTCP) மற்றும் சிஎம்டிஏ (CMDA) அனுமதி போன்ற சட்டப்பூர்வ சான்றிதழ்களைப் பெறுவதில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பி.டி. அரசகுமார், தனக்கு இருக்கும் அரசியல் மற்றும் அதிகார வர்க்க செல்வாக்கை வைத்து அனைத்து அனுமதிகளையும் உடனே பெற்றுத் தருவதாகக் கூறி பல கல்வி நிறுவன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பி.டி. அரசகுமார், ஆரம்பக் காலத்தில் ஒரு நர்சரி பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர் பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் வலம் வந்துள்ளார். அரசியல் பாதையில் 1990 முதல் 2000 வரை திமுகவில் பயணித்த இவர், பின்னர் பாஜகவிற்குச் சென்றுவிட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார். ஆளுங்கட்சி பிரமுகர் என்ற போர்வையில் கல்வி தந்தை போல் வலம் வந்த இவர், சான்றிதழ்களைப் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் இழுத்தடித்து ஏமாற்றியதால் தற்பொழுது சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துப் போலீசார் அவரை வளைத்துப் பிடித்துள்ளனர்.
விசாரணையில், இவர் மீது ஏற்கனவே கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்குத் தடையில்லா சான்று வாங்கித் தருவதாகக் கூறி 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கும், நில அபகரிப்பு வழக்குகளும் நிலுவையில் இருப்பதுடன், 2017ல் இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவின் நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-III) உதவி ஆணையர் செந்தில் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணைக்குப் பிறகு இவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகக் குழுவினரை அரசகுமாரின் ஆதரவாளர்கள் மிரட்டிய சம்பவமும் தற்பொழுது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.