தென் கொரியாவின் புகழ்பெற்ற K-Pop இசைக் குழுவான BTS-ன் உறுப்பினர்களான RM (கிம் நம்ஜூன்) மற்றும் J-Hope (ஜங் ஹோ-சோக்) ஆகியோர், சர்ச்சைக்குரிய அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுன் (Chris Brown) மற்றும் அஷர் (Usher) இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த கச்சேரியில் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.
இசை நிகழ்ச்சியின் போது எடுத்த வீடியோக்களை J-Hope தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், மேடைக்கு பின்புறம் (Backstage) BTS உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் கிறிஸ் பிரவுன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். குடும்ப வன்முறை மற்றும் தாக்குதல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகளில் சிக்கித் தண்டனை பெற்ற ஒரு நபருடன் BTS உறுப்பினர்கள் நட்பு பாராட்டுவது மற்றும் அதனைப் பகிரங்கமாகப் பரப்புவது தவறான முன்மாதிரி என உலகம் முழுவதும் உள்ள BTS ரசிகர்கள் (ARMY) கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் பாடல்கள் மற்றும் ஐநா சபை உரைகள் மூலம் “தன்னைத்தானே நேசியுங்கள்” (Love Yourself) மற்றும் “வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு” போன்ற நேர்மறையான கருத்துகளை உலகளவில் பரப்பி வரும் BTS அமைப்பின் கொள்கைகளுக்கு, இத்தகைய செயல் முற்றிலும் முரணாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஒரு முன்னணி இசைக் குழுவின் உறுப்பினர்கள், தொடர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தீவிரமடைந்து வரும் போதிலும், BTS உறுப்பினர்களான RM மற்றும் J-Hope அல்லது அவர்களின் மேலாண்மை நிறுவனம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கனவே பல்வேறு உலகளாவிய இசைச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வரும் BTS உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை, அவர்களின் பிராண்ட் மதிப்பிற்கும் உலகளாவிய ரசிகர் தளத்திற்கும் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.