Posted in

போர்நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல்? ஹிஸ்புல்லா சுரங்கத்தை தகர்த்த ராணுவம் – எல்லையில் மீண்டும் பதற்றம்!

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த பாதுகாப்பு உடன்படிக்கை (Ceasefire Agreement) கையெழுத்தானது. இந்தச் சூழலில், போர்நிறுத்த விதிமுறைகளை அப்பட்டமாக மீறி, தெற்கு லெபனானில் உள்ள மஜ்தல் ஜோன் (Majdal Zoun) கிராமத்தில் ஹிஸ்புல்லா அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பிரம்மாண்டமான நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் வெடிவைத்துத் தகர்த்துள்ளது. இது தொடர்பான கூட்டு அறிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றுப்படி, இந்த நிலத்தடி சுரங்கப்பாதையானது சுமார் 200 மீட்டருக்கும் அதிகமான நீளமும், 25 மீட்டருக்கும் அதிகமான ஆழமும் கொண்டது என்றும், இது ஈரானிய தொழில்நுட்ப உதவியுடன் கட்டமைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழித் தாக்குதல்களால் அழிக்க முடியாத அளவுக்கு வலிமையாக இருந்த இந்தச் சுரங்கத்திற்குள் இஸ்ரேலியப் பொறியியல் படையினர் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அதிநவீன ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் 4 ஏவுகணை ஏவுதளங்கள் (Launch Shafts) கண்டறியப்பட்டு, பின்னர் அவை வெடிபொருட்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் அமெரிக்காவிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கை தற்பொழுது ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதியை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. “நாங்கள் பாதுகாப்பு மண்டலத்தில் (Security Zone) தொடர்ந்து நீடிப்போம்; எங்களின் எல்லைப் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்து, இஸ்ரேல் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

மறுபுறம், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. தாங்கள் இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றி வந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் இறையாண்மை மீது ‘கொடும் தாக்குதலை’ நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா சாடியுள்ளது. இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறல்களைத் தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், “தங்களின் தாய்நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு முழு உரிமை (Right to defend) உள்ளது” என்றும், இஸ்ரேலின் தாக்குதலுக்குத் தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹிஸ்புல்லா இயக்கம் தங்களின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது