மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மற்றும் கடல்சார் முற்றுகைப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கக் கடற்படையின் ‘யூ.எஸ்.எஸ். ஆப்ரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) போர்க்கப்பலுக்குப் பதிலாக ‘யூ.எஸ்.எஸ். ஜார்ஜ் வாஷிங்டன்’ (USS George Washington) என்ற புதிய அணுசக்தி விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்ப அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பசிபிக் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்த வாஷிங்டன் போர்க்கப்பல், வியட்நாமில் இருந்து புறப்பட்டு மலாக்கா நீரிணை வழியே இந்தியப் பெருங்கடல் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் அமெரிக்கக் கடற்படை அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் மாதம் சான் டியாகோவிலிருந்து புறப்பட்ட யூ.எஸ்.எஸ். ஆப்ரகாம் லிங்கன் கப்பல், சுமார் 250 நாட்களுக்கும் மேலாகத் தொடர் ரோந்து மற்றும் போர் முனையில் செயல்பட்டு வருகிறது. கடலில் இடைவிடாது இயங்கி வரும் இக்கப்பலில் சுமார் 200 நாட்களுக்கும் மேலாக வீரர்கள் எந்தவொரு துறைமுகத்திலும் தரையிறங்க முடியாத அளவுக்குக் கடுமையான பணி அழுத்தம் நிலவி வருகிறது. இதனால், நீண்டகாலப் போர்க் களப் பயணத்தின் காரணமாக அந்நாட்டின் முக்கியக் கடற்படை வீரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் உடல் சோர்வுக்கும் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், ஆப்ரகாம் லிங்கன் கப்பலில் குடிநீர் தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, சுகாதாரம் மற்றும் கழிப்பறைப் பராமரிப்புக் கோளாறுகள் நிலவுவதாக அமெரிக்கச் செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால் உள்ளிட்ட நாடாளுமன்றத் தலைவர்கள் பென்டகனுக்குப் பரபரப்புக் கடிதம் எழுதியுள்ளனர். கப்பலில் உள்ள வீரர்களின் மனநலப் பாதிப்புகள் குறித்த புகார்கள் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திட்டமிட்ட சுழற்சி முறை மாற்றத்தின் (Planned Rotation) ஒரு பகுதியாகவே புதிய போர்க்கப்பல் களமிறக்கப்படுவதாகப் பென்டகன் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் அமெரிக்காவின் வான் மற்றும் கடற்படைப் பலத்தைத் தக்கவைக்கவும், தனது கூட்டாளி நாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் யூ.எஸ்.எஸ். ஜார்ஜ் வாஷிங்டன் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தக் கப்பல் மத்திய கிழக்கிற்கு மாற்றப்படுவதால், ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களின் இருப்பு தற்காலிகமாகக் குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு போர் முனையில் அமெரிக்காவின் பிடி மேலும் இறுக்கமடையும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.