தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், அண்மையில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவிய ‘வெள்ளை பவுடர்’ வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடங்கி வைத்த அதே நாளில் இந்த வீடியோ வெளியானதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, அமைச்சர் சரத்குமாரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது மொபைல் திரையில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வெள்ளை நிறப் பொருள் ஒன்றைச் சரத்குமார் தூளாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது போதைப்பொருள் பயன்பாட்டைப் போன்றே இருப்பதாகக் கூறி திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரத்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளன. குறிப்பாக, இன்று மாநிலம் தழுவிய அளவில் தடையை மீறி திமுகவினர் நடத்திய அதிரடி ஆர்ப்பாட்டங்கள் தவெக அரசுக்குக் கூடுதல் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தோன்றி உருக்கமான வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஐபிஎல் போட்டி பார்க்கச் சென்றபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தை மாத்திரையை விழுங்க மறுத்ததால், மனைவியின் வேண்டுகோளின்படி ஏடிஎம் கார்டை வைத்து மாத்திரையைத் தூளாக்கித் தண்ணீரில் கலந்து கொடுத்தேன்” என்றும், இது போதைப்பொருள் அல்ல என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு கொண்ட மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் தான் எப்படிப் போதைப்பொருள் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தை அத்தனை எளிதாக விடப்போவதில்லை என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. மற்றொருபுறம், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக உளவுத்துறை தனது ஆரம்பகட்ட விசாரணையை முடித்து, முதலமைச்சர் விஜயிடம் ரகசிய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் நற்பெயருக்கும், தவெக அரசின் ‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற முக்கியக் கொள்கைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த விவகாரம் அமைந்துள்ளதால், முதலமைச்சர் விஜய் இது தொடர்பாகச் சரத்குமாரிடம் விளக்கம் கேட்க உத்தரவிட்டுள்ளார். இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் அமைச்சர் சரத்குமாரின் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் அல்லது அவர் தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.