Posted in

ராகுலை இழுக்காதீங்க! – மேகதாது சர்ச்சையில் அன்புமணிக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்குத் தனது முதல் அதிரடிப் பதிலடியைக் கொடுத்துள்ளார். கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களைத் தேவையின்றி இழுப்பவர்கள் யாராக இருந்தாலும், “காங்கிரஸைத் தொட்டால் திருப்பி அடிப்போம்” என்று அவர் எச்சரித்துள்ளார். அது திமுக, அதிமுக, பாஜக அல்லது நேற்றைய பாமக, சீமானாக இருந்தாலும் சரி, தமிழகத்தின் நீர் உரிமையைக் காப்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் மிகவும் தெளிவாக உள்ளதாக அவர் பிரகடனம் செய்துள்ளார்.

மத்திய பாஜக அரசு அந்தமான் நிக்கோபாரில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ‘கிரேட் நிக்கோபார்’ பெருந்திட்டத்தை (Great Nicobar Project) சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம் காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனைச் சுட்டிக்காட்டிய பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், “ராகுல் காந்திக்கு அந்தமானில் காடுகள் அழிவது தெரிகிறது, ஆனால் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டு 12,500 ஏக்கர் வனப்பகுதி அழிவது ஏன் தெரியவில்லை? அங்கு ஒரு நீதி இங்கு ஒரு நீதியா?” என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள மாணிக்கம் தாகூர், “ஒரு படித்த மருத்துவரான அன்புமணி இப்படிப் பேசுவது அசிங்கம்; பிரதமர் மோடிக்கு ஜாலரா அடிப்பதற்காக ராகுல் காந்தியை இதில் இழுக்க வேண்டாம்” என்று சாடியுள்ளார்.

அன்புமணியின் வாதத்திற்குப் பதில் கேள்வி எழுப்பிய தாகூர், “அந்தமானில் சீனாவுக்கு வியூக ரீதியாகச் சவால் விட துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைக்க மோடி அரசு இயற்கை வளங்களை அழிப்பது சரி என்று அன்புமணி கூறுகிறாரா? மோடி செய்தால் அது சரி என்றால், அதே லாஜிக்கில் கர்நாடகாவில் டிகே சிவகுமார் மேகதாது அணை கட்ட நினைப்பதும் சரி என்று அன்புமணி ஒற்றுக் கொள்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார். அந்தமானில் மோடி செய்வதும் தவறு, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அணை கட்ட முயல்வதும் தவறு என்பதே தங்களின் வெளிப்படையான நிலைப்பாடு என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேகதாது விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி எப்போதுமே தமிழக மக்களின் பக்கம் தான் நிற்கும் என்று உறுதியளித்த மாணிக்கம் தாகூர், “தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரின் வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட வைக்க நாங்கள் விடமாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசினார். கர்நாடகா காங்கிரஸ் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளைத் தமிழக காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என்றும், சொந்த மாநில மக்களின் விவசாய உரிமைகளுக்காகப் போராடத் தங்களுக்கு முழு சுதந்திரத்தை ராகுல் காந்தி வழங்கியுள்ளார் என்றும் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் தனது உரையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.