Posted in

முடிஞ்சா தொட்டுப் பாரு! – மதுரையில் இறுதிச்சடங்கில் வாலிபர்கள் நடுரோட்டில் பைக் அராஜகம்; அலட்சியமாக வேடிக்கை பார்த்த போலீஸ்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மரணமடைந்த ‘ரெக்கை’ கார்த்தி என்ற இளைஞரின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, அவரது நண்பர்கள் பொதுமக்களுக்குக் கடும் இடையூறு விளைவிக்கும் வகையில் பைக்குகளில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சவக்கிடங்கிலிருந்து அச்சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இந்த அராஜகம் அரங்கேறியுள்ளது. மருத்துவமனை வளாகத் தொடக்கத்திலிருந்தே வைகை ஆற்றங்கரைச் சாலை மற்றும் வடகரைச் சாலை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த இளைஞர்கள் ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைத்தனர்.

ஒரே பைக்கில் மூன்று பேர் அமர்ந்து கொண்டு, அதிவேகமாகப் பைக்குகளை முறுக்கியபடி, சாலையின் நடுவே ‘வீலிங்’ (Wheeling) போன்ற அதிரடி சாகசங்களை இந்த இளைஞர்கள் செய்துள்ளனர். “உயிரானவன் போயிட்டான்” என்று கூச்சலிட்டபடி, தங்களின் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பணையம் வைத்து அவர்கள் செய்த சேட்டைகளால், அவ்வழியாகப் பள்ளி முடிந்து பேருந்துகளிலும், மிதிவண்டிகளிலும் வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர். வடகரைச் சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அவசரத் தேவைகளுக்குச் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல மணி நேரம் டிராபிக்கில் சிக்கித் தவித்தனர்.

இந்த அத்துமீறல்களை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிகையும் எடுக்காமல், வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். “இறுதி ஊர்வலங்களின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” என்ற காவல்துறையின் எச்சரிக்கை விதியைத் துச்சமாக மதித்த அந்த வாலிபர்கள், “முடிஞ்சா தொட்டுப் பாரு” என்பது போல பொதுமக்களையும், சட்டத்தையும் மிரட்டும் தோரணையில் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கு, சாகசக் கும்பலுக்கு மேலும் துணிச்சலைக் கொடுத்தது போல் அமைந்திருந்தது.

இறந்துபோன நண்பனுக்குக் கண்ணியமான முறையில் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டிய இளைஞர்கள், பொதுமக்களை அச்சுறுத்தி நடுரோட்டில் அட்ராசிட்டி செய்வதுதான் நண்பனுக்குக் காட்டும் மரியாதையா என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றனர். தங்கள் காவல் நிலைய எல்லையைத் தாண்டி ஊர்வலம் சென்றால் போதும் என்று நினைக்கும் போலீசாரின் அலட்சியமே, மதுரையில் இது போன்ற தொடர் பைக் ரேஸ் மற்றும் அராஜகச் சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது மாவட்டக் காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.