சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பயணச்சீட்டு (Ticket) பரிசோதனை செய்த பெண் டிடிஆர்-இன் (TTR) கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாராத மோதலைத் தொடர்ந்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த மாணவி மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னைக் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மின்சார ரயில் மூலம் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். அவர் எழும்பூர் நிலையத்தில் ரயிலை விட்டு கீழே இறங்கிய போது, அங்கு பிளாட்பாரத்தில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்யும் பணியில் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் (டிடிஆர்) ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பெண் டிடிஆர் ஒருவர் அந்த சட்டக் கல்லூரி மாணவியை மறித்து, “டிக்கெட் எங்கே, காட்டுங்கள்” என்று சாதாரணமாகக் கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு சட்டென ஆவேசமடைந்த அந்த மாணவி, “நான் ரயிலில் டிக்கெட் எடுத்துக்கொண்டு தான் பயணம் செய்தேன், உன்னிடம் காட்ட முடியாது” எனக்கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த மாணவி, பணியில் இருந்த பெண் டிடிஆர் என்றும் பாராமல் அனைவரின் முன்னிலையிலும் அவரது கன்னத்தில் பளார் என பலமாக அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் உடனடியாக அங்கு கூடினர்.
இச்சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண் டிடிஆர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரைத் தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக அந்த சட்டக் கல்லூரி மாணவி மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சமீபகாலமாக டிக்கெட் இன்றி பயணிப்பவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.