Posted in

உங்க விளம்பர வெறியை நிறுத்துங்க! உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்கும் பாய்ச்சல்!

தமிழ்நாட்டில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து ஆய்வு என்ற பெயரில் சமூக வலைத்தளங்களுக்காக ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்களை எடுத்து வருவது அண்மைக்காலமாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்தியபோது, பிஞ்சுக் குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம் மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் விளம்பர மோகம் மாநில அரசியலில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றிற்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் கீர்த்தனா, அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்குச் சில மாணவிகளால் சட்டென்று பதிலளிக்க முடியாமல் போன சூழலில், அங்கிருந்த ஆசிரியையைப் பார்த்து, “லாஸ்ட் பெஞ்ச் (Last Bench) மாணவிகளைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்று கேமராக்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மக்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் அமைச்சரின் பொறுப்பற்ற செயலாகக் கடுமையான விமர்சனங்களைச் சந்திக்கத் தொடங்கியது.

இவ்விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் மீது மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். “அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது; இது முற்றிலும் உணர்ச்சியற்ற ஒரு செயல் (Grossly insensitive). மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். நமது வேலை குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதே தவிர, அவர்களின் மனதை உடைப்பது அல்ல; உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்” என உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் இச்சம்பவத்திற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தான் நினைப்பதுதான் சரி எனப் பிடிவாதம் பிடிப்பது உண்மையான ஆய்வின் பணி அல்ல; மாணவர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் ஊக்கப்படுத்துவதே முறை. அதை விடுத்து ‘Last Bench’ என்று தரம் பிரித்துச் சுட்டிக்காட்டிப் பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் நுழையாதீர்கள்” என அவர் சாடியுள்ளார். சாமானிய மக்களும், குழந்தையின் முகத்தைக் கூட மறைக்காமல் பப்ளிசிட்டிக்காக செய்தியாக்கிய ஊடகங்களையும், குழந்தைகளின் மனதில் தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் அமைச்சரின் இந்தச் செயலையும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *