தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு பொறுப்பேற்றது முதலே, கடந்த திமுக ஆட்சிக்கால ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக ஏ.வ.வேலு, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவின் முன்னணி முன்னாள் அமைச்சர்கள் மீது தவெக அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் தங்களுக்குச் சிறைவாசம் உறுதி என்பதை உணர்ந்துகொண்ட சில முன்னாள்கள், எப்படியாவது கைதிலிருந்து தப்பிக்கப் பல்வேறு வழிகளில் தவெக தலைமையுடன் சமரசம் பேசத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக முன்னாள்களின் நலம் விரும்பிகளும் சட்ட நிபுணர்களும் தங்களுக்குப் பின்னடைவு ஏற்படும் என எச்சரித்துள்ளதால், தவெக தலைமைக்கு மிக நெருக்கமானவர்கள் மூலமாகப் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை திமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். இதுவரை தவெக அரசு எவ்வித சமரசத்திற்கும் இறங்கி வராத சூழலில், வழக்குகளின் பிடியில் சிக்கியுள்ள ஒரேயொரு முன்னாள் அமைச்சர் மட்டும் தவெக மேலிடத்தின் ‘கருணை பார்வையைப்’ பெற்று, தனக்கான வழியை (Route Clear) சுமுகமாக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பனையூர் வட்டாரத்தின் அதிரடித் தகவல்களின்படி, அந்த குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் தவெக தரப்பிடம், “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை; முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகள் மற்றும் முறைகேடுகள் அனைத்திற்கும் பின்னணியில் இருந்தது வேறு சிலர் தான்” என்று கூறி திமுகவின் மிக முக்கிய நிர்வாகிகள் சிலரின் பெயர்களைப் பட்டியலிட்டு தவெக தலைமையிடம் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தவெக அரசு அந்த ஒரு முன்னாள் அமைச்சருக்கு மட்டும் தற்காலிகமாக க்ரீன் சிக்னல் காட்டிவிட்டு, அவர் காட்டிக்கொடுத்த இதர திமுக புள்ளிகளை நோக்கித் தங்கள் விசாரணைக் கணைகளைத் திருப்பியுள்ளது.
ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணனிடம் திமுகவினர் குதிரை பேரம் பேச முயன்ற விவகாரத்தில் உளவுத்துறை விசாரணை பாய்ந்து ஆடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில், தற்போது பனையூர் தலைமையகத்தை நோக்கி திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சமரசத் தூது அனுப்பி வருவது கோட்டை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசின் இந்த அதிரடி ஆக்ஷன்களால் திமுகவின் உள்கட்சிக்குள்ளேயே ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் அரசியல் உள்விவகாரங்கள் தற்போது அம்பலமாகத் தொடங்கியுள்ளன.