அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகக் கனடா பாரபட்சமான வர்த்தகக் கொள்கைகளைக் கையாளுவதாகக் குற்றம் சாட்டி, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் மீது 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். 1930-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 338-ன் கீழ் (Section 338 of Trade Act 1930) பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை, இரு பக்கத்து நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த வர்த்தகப் போரை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால் பொருட்கள் (Dairy Products) ஆகியவற்றுக்குக் கனடா அரசு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகளையும் வரிகளையும் விதித்துத் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. “அமெரிக்க வணிகங்களையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் கனடாவின் பாரபட்சமான வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த 50 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுகிறது” என டிரம்ப் நிர்வாகம் நியாயப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பிலிருந்து கச்சா எண்ணெய் போன்ற எரிசக்தி பொருட்கள், மீன், முக்கியமான தாதுக்கள் மற்றும் பொட்டாஷ் ஆகிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையேயான ‘CUSMA/USMCA’ இலவச வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை பாதுகாக்கப்பட்ட ஆட்டோமொபைல், ஒயின், சிமெண்ட் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான பொருட்கள் மீது இந்த வரி கடுமையாகப் பாயவுள்ளது. இந்த வரி அமலுக்கு வர 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்குள் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்குக் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறுவதாகவும், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் நுகர்வோர்களுக்கே பெரும் நிதிச்சுமையையும் பணவீக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் “அமெரிக்கா வரியை உயர்த்தினால் கனடாவும் பதிலுக்கு டாலருக்கு டாலர் வரியை உயர்த்த வேண்டும்” என எச்சரித்துள்ளதால் வட அமெரிக்கப் பிராந்தியத்தில் பொருளாதாரப் பதற்றம் அதிகரித்துள்ளது.