ரஷ்யா – உக்ரைன் போரின் உக்கிரமான சூழலில், உக்ரைனின் ஒடேசா (Odesa) துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிச் சென்ற ‘எம்வி கோல்டன் லியோ’ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பலியான 4 இந்தியர்களில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அகில் ஜோயன் (26) என்ற இளைஞரும் ஒருவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அவரது சொந்த ஊரான காசர்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்த அகில் ஜோயன், கடந்த 6 ஆண்டுகளாகக் வணிகக் கடற்படையில் (Merchant Navy) மாலுமியாகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் இவருக்குக் நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறுவதாகக் குடும்பத்தினரால் திட்டமிடப்பட்டிருந்தது. திருமணம் நிச்சயமாகிப் பணிக்குத் திரும்பிய சில வாரங்களிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மேலும், இந்தப் பயணத்தை முடித்துவிட்டு நடப்பு மாத இறுதியோடு இந்தக் கப்பல் பணியில் இருந்து விலகி, புதிய நிறுவனத்தில் சேரவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஜூலை 19 அன்று ஒடேசா துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, ரஷ்யப் படைகள் ஏவிய மூன்று ‘Kh-59/Kh-69’ ரக ஏவுகணைகள் கப்பலின் வலதுபுறத்தில் பலமாகத் தாக்கின. இதில் கப்பலில் பயங்கரத் தீப்பற்றி எரிந்ததில், அகில் ஜோயன் உட்பட 4 இந்திய மாலுமிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கப்பல் நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல் மூலம் வந்த இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஒரே மகனை இழந்து தவித்து வருகின்றனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, கேரளா முதலமைச்சர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில், வெளிநாடு வாழ் மலையாளிகள் நல வாரியம் (NORKA) இந்திய வெளியுறவுத் துறை மற்றும் ரஷ்யத் தூதரகத் தொடர்புகளின் மூலம் அகில் ஜோயனின் உடலை விரைவில் தாயகம் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் கயிறிழுத்தல் (Tug-of-War) விளையாட்டு வீரராகவும் உலக சாதனையாளராகவும் பெயர் பெற்ற ஒரு திறமையான இளைஞனின் இந்த திடீர் மறைவு, கிராம மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.