Posted in

74 ஆண்டுகாலப் புதிர்க்கு விடை! – 2,000 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 52 பேரின் உயிரைக் குடித்த பான் அம் விமானத்தின் இடிபாடுகள்!

கடந்த 1952-ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கி 52 பேரின் உயிரைப் பறித்த ‘பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ்’ (Pan Am) நிறுவனத்தின் பயணிகள் விமானத்தின் இடிபாடுகள், சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகு கடலுக்கு அடியில் 2,000 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போர்ட்டோ ரிகோ நாட்டின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் மூழ்கிக் கிடந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கிளிப்பர் எண்டெவர்’ (Clipper Endeavor) விமானத்தை, நவீன தானியங்கி நீர்மூழ்கி ட்ரோன்கள் (Autonomous Sonar Drones) மூலம் தேடுதல் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று, 64 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட ‘டக்ளஸ் டிசி-4’ (Douglas DC-4) ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இன்ஜின் கோளாறு காரணமாகக் கடலில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தொடக்கத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் கடலில் தரையிறங்கிய அதிர்ச்சியில் இருந்து உயிர் தப்பிய போதிலும், விமானப் பணிப்பெண்களுக்கு அவசரகால பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அனுபவம் இல்லாததாலும், பயணியருக்கு நீச்சல் உடைகள் (Life Vests) எங்குள்ளது என்பது தெரியாததாலும் ஏற்பட்ட பதற்றத்தில் 3 நிமிடங்களுக்குள் விமானம் கடலுக்குள் மூழ்கியது. இதில் 17 பேர் மட்டுமே அமெரிக்கக் கடலோரக் காவல் படையினரால் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 52 பேர் கடலுக்குள் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏர்/சீ ஹெரிடேஜ் பவுண்டேஷன் (Air/Sea Heritage Foundation), ‘டீப் சீ விஷன்’ (Deep Sea Vision) நிறுவனம் மற்றும் டிஸ்கவரி சேனலின் ‘எக்ஸ்பெடிஷன் அன்நவுன்’ குழுவினர் இணைந்த நடத்திய பல ஆண்டுகால தீவிரத் தேடுதல் வேட்டைக்கு பிறகே இந்த விடை தெரியாத மர்மம் முடிவுக்கு வந்துள்ளது. உயர் நுட்ப சோனார் கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், கடலின் அடியில் இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையிலும், விமானத்தின் உடற்பகுதியில் பான் அம் நிறுவனத்தின் சின்னமும் ‘கிளிப்பர் எண்டெவர்’ என்ற பெயரும் இன்றும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் அப்படியே பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய விபத்தாக இது கருதப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகே, உலகளவில் இயங்கும் அனைத்துப் பயணிகள் விமானங்களிலும் டேக்-ஆஃப் செய்வதற்கு முன்பாகக் கட்டாயமாக அளிக்கப்படும் ‘முன்-விமானப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்’ (Pre-flight safety briefings), அவசரகால வெளியேற்ற முறைகள் மற்றும் லைஃப் ஜாக்கெட்டுகள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கும் நடைமுறை சர்வதேச சட்டமாக கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 74 ஆண்டுகளுக்குப் பிறகு விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பூரிப்பையும் அளித்துள்ளது.