Posted in

முன்கூட்டியே உத்தரவிட முடியாது! – செந்தில் பாலாஜி, அசோக் குமார் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

உத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், விசாரணை என்ற பெயரில் தங்களைக் காவல் துறையினர் துன்புறுத்தக் கூடாது என்றும், கைது செய்வதற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தவெக எல்.எல்.ஏ இளையராஜாவுக்கு ரூ.35 கோடி லஞ்சம் கொடுத்துக் குதிரை பேரம் பேச முயன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியிருந்தது. இருப்பினும், “தங்களுக்கு எதிராகத் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன; மேலும், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான விவகாரத்தில் கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாகப் பிற தலைவர்கள் கூறி வருவதால், ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை அநியாயமாகக் கைது செய்யக் கூடும்” எனத் தெரிவித்து, விசாரணைக்கு பிஎன்எஸ்எஸ் (BNSS) சட்டத்தின் கீழ் முன்நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடக் கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர், “பொத்தாம் பொதுவாகக் குற்றச்சாட்டுகளைக் கூறி மனுதாரர்கள் உத்தரவு கோருவதால், விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “நாங்கள் விசாரணையைத் தடுக்கவில்லை, மாறாக முறையான நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் துன்புறுத்தக் கூடாது என்றும் மட்டுமே கோருகிறோம்” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும் நீங்கள் இன்னும் நீதிமன்றத்தில் சரணடைந்து பிணைப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கவில்லை; இத்தகைய சூழ்நிலையில் துன்புறுத்தக் கூடாது எனக் கோர முடியாது” என அதிரடியாகக் கூறினார். மேலும், மற்ற வழக்குகளைப் பொறுத்தவரை ஊகங்களின் அடிப்படையில் முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு செந்தில் பாலாஜி தரப்பிற்குப் பேரிடியாக அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.