ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். இளையராஜாவிடம் ரூ. 35 கோடி வரை பேரம் பேசி, கட்சிக்கு எதிராக வாக்களிக்க முயன்றதாகத் தொடரப்பட்ட குதிரை பேர வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் ஜாமீன் மனுக்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடித் தீர்ப்பு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருந்த தீர்மானத்தின் போது கட்சிக்கு எதிராக வாக்களித்தால் பெரும் தொகை தருவதாகத் தொலைபேசியில் பேரம் பேசி, கொலை மிரட்டலும் விடுத்ததாக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல்துறையினர், யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட 8 நபர்களை முதற்கட்டமாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் உள்ள திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், சீனிவாசன், செல்வன், ராஜசேகர், சேதுராஜ் மற்றும் கணேசன் ஆகிய 8 பேரும் தங்களுக்கு பிணை வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கில் பல முக்கிய முதன்மை ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் திரட்டப்பட்டு விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் காவல் துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ஜனநாயக அமைப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இ வழக்கில் காவல் துறையினர் தங்களின் புலன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதால், மேலும் பல முக்கியப் புள்ளிகள் இதில் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.