உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) பிராந்தியத்தில் உக்ரைனிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுதத் துறை தலைவர்கள் பங்கேற்ற கண்காட்சி நடைபெற்ற பயிற்சிக் களம் மீது ரஷ்யா நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்; மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனின் ராணுவத் தலைமையையும் ஆயுத உற்பத்தி அதிகாரிகளையும் நேரடியாக இலக்கு வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் இந்த பிரம்மாண்டத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிய்வ் பிராந்தியத்தில் உள்ள ராணுவப் பயிற்சிக் களத்தில் புதிய ரக ஆயுதங்களின் கண்காட்சி மற்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தின. வான்வழி எச்சரிக்கை சைரன் ஒலித்த சில நிமிடங்களிலேயே சக்திவாய்ந்த வெடிச்சத்தங்களுடன் ஏவுகணைகள் விழுந்து நொறுங்கின. இதில் ஆயுதக் கிடங்குகள் மற்றும் சுற்றியுள்ள 27 குடியிருப்பு வீடுகளும் கடுமையாகச் சேதமடைந்தன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் தலைமை அரசு வழக்கறிஞர் ரூஸ்லான் கிரவ்சென்கோ (Ruslan Kravchenko) இரண்டு முக்கிய குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் போர்க் குற்றங்களுக்கு எதிரான வழக்கோடு சேர்த்து, போர்க் காலச் சூழலில் இவ்வளவு ஆபத்தான பகுதியில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆயுதக் கண்காட்சிக்கு அனுமதி அளித்தது யார், பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் இந்த கொடூரத் தாக்குதலுக்குப் தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதேவேளையில், கிய்வ் நகரில் தொடர்ந்து தாக்குதல் அச்சம் நிலவுவதால் மக்கள் நிலத்தடி ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச சமூகத்தில் மீண்டும் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.