Posted in

கொரோனா லேப் லீக் உண்மைய மறைத்த முன்னணி விஞ்ஞானிகள்: அம்பலமான ஸ்லாக் மெசேஜ்கள்!

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய தொடக்க காலத்தில், “வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசியவில்லை” என உலகளவில் பகிரங்கமாக அறிவித்த முன்னணி சர்வதேச விஞ்ஞானிகள், தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்ட போது ‘லேப் லீக்’ (Lab Leak) சாத்தியக்கூறை உறுதியாகச் சந்தேகித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசு விவகாரங்களுக்கான குழு (Senate Homeland Security Committee) வெளியிட்டுள்ள ஸ்லாக் (Slack) உரையாடல்கள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘நேச்சர் மெடிசின்’ (Nature Medicine) இதழில் வெளியான “தி ப்ராக்ஸிமல் ஆரிஜின் ஆஃப் சார்ஸ்-கோவ்-2” (The Proximal Origin of SARS-CoV-2) என்ற ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களான கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Kristian Andersen), எடி ஹோம்ஸ் (Eddie Holmes) உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளின் உள்வரிச் செய்திகளே தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. வெளியுலகிற்கு வைரஸ் இயற்கை வழியிலேயே தோன்றியது என அடித்துக் கூறிய இந்த விஞ்ஞானிகள், தங்களது ரகசிய உரையாடல்களில் லேப் லீக் நடப்பதற்கு 20% முதல் 30% வரை வாய்ப்பிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, வைரஸின் மரபணுவில் காணப்பட்ட ‘ஃபியூரின் க்ளீவேஜ் சைட்’ (Furin Cleavage Site) எனும் குறிப்பிட்ட கட்டமைப்பு குறித்தும், வுஹான் லேப் ஆய்வுகள் குறித்தும் பேசிய கிறிஸ்டியன் ஆண்டர்சன், “சில வலுவான சந்தேகத்திற்குரிய சான்றுகள் வெளிவந்துள்ளன; தமக்கு இதில் முழு நம்பிக்கை இல்லை” என்று சக விஞ்ஞானிகளிடம் பகிர்ந்துள்ளார். மேலும், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் நேரடியாக ஒருங்கிணைந்து செயல்பட்ட இவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOI) கீழ் விசாரணையில் சிக்காமல் இருக்க மின்னஞ்சல்களைத் தவிர்த்துப் பேசிக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் லேப் லீக் கோட்பாட்டை ஒரு “சதித்திட்டம்” (Conspiracy Theory) என முத்திரையிட்டு ஊடகங்களும் பொது சுகாதார அமைப்புகளும் நிராகரிக்க இந்த விஞ்ஞானிகளின் ஆய்வுக் கட்டுரையே முதன்மைக் காரணியாக இருந்தது. தற்போது அவர்களின் இரட்டை வேடமும், உண்மைத் தகவல்களை மறைக்க முயன்ற ரகசிய உரையாடல்களும் வெளிவந்துள்ளதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் உண்மைத் தோற்றம் குறித்த விசாரணை மற்றும் ஆய்வகப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.