புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு நீண்ட நாட்களாகியும் அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், முதலமைச்சர் என். ரங்கசாமி ஒருவழியாகத் தனது புதிய இலாக்கா பட்டியலை மாநில ஆளுநர் கைலாஷ்நாதனிடம் நேரில் சென்று ஒப்படைத்துள்ளார். பொதுவாக முதலமைச்சர் இலாக்கா பட்டியலை அளித்த சில மணி நேரங்களிலேயே அது அரசு இதழில் (Gazette) வெளியிடப்படும் என்றபோதிலும், பாஜக கோரிய முக்கியமான துறைகளை ரங்கசாமி ஒதுக்காததால் அந்தப் பட்டியல் வெளியாவதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
கூட்டணி அமைச்சரவையில் தங்களது செல்வாக்கை உயர்த்த பாஜக முயற்சிப்பதும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்து கட்சியைப் பிளவுபடுத்த பாஜக திட்டமிடுவதாக எழுந்த தகவல்களுமே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. தங்களது ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் முதலமைச்சர் ரங்கசாமி அதிரடியாக இலாக்கா பட்டியலைத் தயார் செய்து ஆளுநரிடம் அளித்துள்ளார். இருப்பினும், இரு கட்சிகளுக்கும் இடையே துறைகள் ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள பனிப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
பாஜகவின் அரசியல் பாணி மீது கடும் அதிருப்தியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி, எந்த நேரத்திலும் அக்கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடும் என்ற தகவல்களும் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகின்றன. புதுச்சேரி மாநில சுயஆட்சி உரிமைகளை முன்னிறுத்தி போர்க்கொடி தூக்கவும், பாஜக உடனான உறவைத் துண்டித்துக் கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலைத் தனித்தோ அல்லது புதிய கூட்டண அமைத்தோ சந்திக்கலாம் என்ற யோசனையிலும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
இந்த அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்தால் புதுச்சேரியில் எளிதாக ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என ரங்கசாமி கணக்கு போடுவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் தவெக பொதுச்செயலாளர் புசி ஆனந்தை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதல் இன்றி எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது என அவர் சிரித்தபடி பதிலளித்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.