சென்னையில் நடைபெற்ற நீட் (NEET) தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டக் களத்தில் தனது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டு, கையில் இருந்த மைக் பிடுங்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகை சனம் ஷெட்டி மீண்டும் கடும் ஆவேசத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் உண்மையான எண்ணத்துடன் வரவில்லை என்றும், “போராட்டக் களத்தில் நிற்பவர்களில் பலர் ஃபிராடுங்க, நான் அதை நேரில் பார்த்தேன்” என்றும் செய்தியாளர்களிடம் அவர் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தவெக தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்ததாக சனம் ஷெட்டி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. போராட்ட மேடையைப் பயன்படுத்தி சினிமா பற்றிப் பேசுவதற்குக் கூட்டத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அமைப்பாளர்கள் அவரிடமிருந்து ஒலிவாங்கியைத் திரும்பப் பெற்றனர். இதனால் கோபமடைந்த சனம் ஷெட்டி, தனது பேச்சுரிமை பறிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி அங்கிருந்து ஆத்திரத்துடன் வெளியேறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சனம் ஷெட்டி, “மாணவர்களின் நீட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். ஆனால், இந்த போராட்டக் களம் மாணவர் நலனுக்கானது அல்ல; குறிப்பிட்ட அரசியல் அஜெண்டாவிற்காக இயக்கப்படும் போலிப் போராட்டம்” எனச் சாடினார். மேலும், திரைப்படம் பார்த்த ரசிகர்களை ‘ஜோக்கர்கள்’ என விமர்சித்ததைக் சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயக முறையில் நடத்தப்படும் போராட்டத்தில் மாற்றுக்கருத்துடைய மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட சிலர், “நீட் பற்றிப் பேசாமல் சினிமா விளம்பரம் செய்து கவன ஈர்ப்பு அரசியல் செய்ததாலேயே மைக் வாங்கப்பட்டது” என விளக்கமளித்திருந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் கொந்தளித்துள்ள சனம் ஷெட்டி, போராட்டக் களத்தில் போலி நபர்களும் சுயலாபவாதிகளுமே நிறைந்திருக்கிறார்கள் எனத் தனது குற்றச்சாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.