உக்ரைன் மீதான போருக்குத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்காகப் சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறி இயங்கும் ரஷ்யாவின் ‘நிழல் கடற்படை’ (Shadow Fleet) எண்ணெய் ராயல் கப்பல்கள், தினமும் பிரிட்டனின் இங்கிலீஷ் சேனல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு மிக அருகில் பயணித்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றன. பிரிட்டனின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் மாஸ்கோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த ரகசியக் கப்பல்களைக் கைப்பற்ற பிரிட்டன் அரசும் இராணுவமும் தீவிர களம் இறங்கியுள்ளன.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்று சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் பொருட்டு, தகுந்த ஆவணங்களோ அல்லது நாட்டின் கொடியோ இல்லாமல் 700-க்கும் மேற்பட்ட பழமையான கப்பல்கள் இந்த நிழல் கடற்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அத்துமீறலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச கடல்சார் சட்டங்களின் கீழ் பிரிட்டன் கடற்பரப்பில் நுழையும் அல்லது கடந்து செல்லும் சந்தேகத்திற்குரிய ரஷ்ய நிழல் கப்பல்களை நேரில் சென்று சோதனையிடவும், தேவைப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்யவும் பிரிட்டன் ராயல் மரைன்ஸ் (Royal Marines) மற்றும் கடற்படை வீரர்களுக்குப் பிரதமர் கீர் ஸ்டார்மர் முழு அதிகாரம் அளித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அண்மையில் பிரிட்டன் இங்கிலீஷ் சேனல் பகுதியில் சர்வதேசத் தடைகளை மீறிப் பயணித்த ரஷ்யாவின் ‘ஸ்மிர் டோஸ்’ (Smyrtos) என்ற இராட்சத எண்ணெய் டேங்கர் கப்பலை பிரிட்டனின் விசேஷ கமாண்டோ படைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர்க்கப்பல்களின் உதவியுடன் 6 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் இடைமறித்துக் கைப்பற்றினர். இதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகளின் கீழ், பிடிபடும் ரஷ்ய நிழல் கப்பல்களில் உள்ள கோடிக்கணக்கான மதிப்பிலான எண்ணெயை ஏலம் விட்டுப் பறிமுதல் செய்யப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ரஷ்யப் போர்க்கப்பல்கள் பிரிட்டன் கடற்படைக்கு மிக அருகில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை நடத்தித் தங்களின் பலத்தைக் காட்டி அச்சுறுத்த முயன்ற போதிலும், பிரிட்டன் அரசு தனது பாதுகாப்பில் சற்றும் பின்வாங்காது என எச்சரித்துள்ளது. “புதினின் சட்டவிரோதப் போருக்கான நிதி ஆதாரத்தை முடக்கும் வரை இந்த ரகசியக் கப்பல்கள் மீதான வேட்டை தொடரும்” என லண்டன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியாகத் தெரிவித்துள்ளதால், வடகடல் மற்றும் இங்கிலீஷ் சேனல் பகுதிகளில் இராணுவப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.