Posted in

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு தவெக அரசு வழங்கிய பணி ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி!

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு வழங்கிய அரசு வேலை நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள சூழலில், விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்ட இந்த பணி நியமனங்கள் சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துச் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அண்மையில் ஜூலை மாத தொடக்கத்தில் கரூர் சென்ற முதல்வர் விஜய், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 32 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அரசியல் கூட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்கு 2020 அரசாணையில் எவ்வித விதிகளும் இல்லை என்றும், வழக்கு விசாரணையில் உள்ள சூழலில் அரசுப் பணி வழங்குவது சாட்சிகளைப் பிறழ் சாட்சிகளாக மாற்ற வழிவகுக்கும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிமன்றம், தவெக அரசின் இந்த நடவடிக்கை அரசாணை விதிமுறைகளுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் எதிரானது எனச் சுட்டிக்காட்டி பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது.

ஏற்கனவே இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்ட அரசு வேலை வாய்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தவெக அரசிற்கு மிகப்பெரிய சட்ட ரீதியான பின்னடைவாகப் பார்க்கப்படுவதுடன், தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.