Posted in

பாதுகாப்பையும் மீறி மீண்டும் தாக்குதல்! டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகக் கட்டடத்தை (US Consulate) இலக்கு வைத்து மர்ம நபர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் அதே தூதரகக் கட்டடத்தின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றாலும், கட்டடத்தின் முன்பகுதி லேசான சேதமடைந்துள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை வேளையில் தூதரகத்தின் வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கு ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதை அடுத்து, காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிவேகமாகப் பின்தொடர்ந்து (High-speed chase) விரட்டிச் சென்றனர். இருப்பினும், தாக்குதல் நடத்திய நபர் காரை வேகமாக ஓட்டித் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் டொராண்டோ காவல் துறை துணை ஆணையர் பிராங்க் பரேடோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 10-ஆம் தேதியும் இதே அமெரிக்க தூதரகக் கட்டடத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கடந்த மாதம் காவல் துறையினர் கைது செய்திருந்தனர். முதல் தாக்குதலுக்குப் பிறகு தூதரகத்தின் வெளியே பிரத்யேகமாக ரோந்து வாகனம் மற்றும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும், அதையும் மீறி மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது நகரின் பாதுகாப்பைக் கேள்விகுறியாக்கியுள்ளது.

இத்தாக்குதல் குறித்துக் கடுமையாகப் பேசியுள்ள டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow), இது ஒரு துணிச்சலான மற்றும் அத்துமீறிய தாக்குதல் எனக் கண்டித்துள்ளார். “தாக்குதலுக்குக் காரணமானவர்களை நாங்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நகரில் சமீபத்தில் யூத மதத் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும், இந்தத் தாக்குதலுக்கும் ஏதேனும் கூலிப்படை அமைப்புகளுடன் (Gun-for-hire networks) தொடர்புள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்