Posted in

ஜி ஜின்பிங் உடல்நிலை சரியில்லையா? உரையை பாதியில் நிறுத்தி பிரதமர் மோடி; உலகளவில் பரவும் பரபரப்பு!

புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) அசெளகரியமாக இருப்பதைக் கவனித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையை பாதியிலேயே நிறுத்தி “எல்லாம் சரியாக இருக்கிறதா?” (Is it OK?) என இருமுறை விசாரித்த நிகழ்வு உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில், மாநாட்டுக் களத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஜி ஜின்பிங் முகத்தில் அசெளகரியமான உணர்வுகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாகத் தனது உரையை நிறுத்திய பிரதமர் மோடி, ஜின்பிங்கின் மொழிபெயர்ப்பாளரை நோக்கி “Is it OK?” எனக் கேட்டார். ஜின்பிங் தனது தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்த பிறகே மோடி மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார். மைக்ரோஃபோன் கோளாறு அல்லது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என ஒரு தரப்பும், உடல்நலக் குறைவுதான் காரணம் என மறுகோணத்திலும் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அன்று மாலை பிரதமர் மோடி பிரிக்ஸ் தலைவர்களுக்கு அளித் விருந்து உபசாரத்தை (Gala Dinner) சீன அதிபர் ஜி ஜின்பிங் தவிர்த்தது வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. கடும் பயணக் களைப்பு மற்றும் தொடர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் காரணமாகவே அவர் ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுத்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறினாலும், 71 வயதாகும் சீன அதிபரின் ஆரோக்கியம் குறித்த கவலைகளையும் சர்வதேச ஊடகங்களின் விவாதங்களையும் இந்த நிகழ்வு தீவிரப்படுத்தியுள்ளது.

அதேவேளையில், எல்லைப் பிரச்சினை மற்றும் வணிக முரண்பாடுகளுக்கு மத்தியிலும், ஆபத்தான சூழலைக் கவனித்து சீன அதிபரின் நலனில் பிரதமர் மோடி காட்டிய தனிப்பட்ட அக்கறை இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர நட்புறவை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உச்சிமாநாட்டின் போது தலைவர்கள் இடையே காணப்பட்ட இந்த இயல்பான நிகழ்வு, உலகளவில் மிகப்பெரிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.