ஜப்பானின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தால் காஷிமா நகரில் உள்ள புகழ்பெற்ற ‘இயான் மால்’ (Aeon Mall) வணிக வளாகத்தின் இரண்டாம் தளம் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கிருந்த வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வணிக வளாகப் பகுதியில் திடீரென வெடிச்சத்தமும் எழுந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட உடனடியாக வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்ட போதிலும், வெடிவிபத்து மற்றும் தளங்களின் இடிபாடுகளுக்கு இடையே 20 முதல் 30-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உடனடியாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் சனே தாகைச்சி (Sanae Takaichi), நிலநடுக்கத்தால் சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டடங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் சுமார் 3,600 ராணுவ வீரர்கள் தற்காப்புப் படைகள் (Self-Defense Forces) மூலம் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அப்பகுதியில் ரயில்கள் நிறுத்தப்பட்டு, மின்சார விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் அதிர்வுகள் (Aftershocks) நீடிப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வணிக வளாகத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன.