ஈரானுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தீவிர வான்வழிப் போரின் காரணமாக, அமெரிக்கா தனது மிக முக்கிய வான் பாதுகாப்பு அமைப்பான ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (65 சதவீதம்) இருப்பை இழந்துள்ளதாகச் சர்வதேச உத்திசார் ஆய்வுகளுக்கான மையம் (CSIS) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது. அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் தளங்களைக் காக்கத் தொடர் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தி வருவதால், அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு மிகக் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிஎஸ்ஐஎஸ் (CSIS) பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்க ராணுவத்திடம் சுமார் 2,330 பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் இருந்தன. ஆனால், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழிமறித்து அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களால், தற்போதைய கையிருப்பு 759 முதல் 827 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது. இதேபோல், மற்றொரு அதிநவீன ‘தாட்’ (THAAD) ஏவுகணை அமைப்புகளின் இருப்பும் 38 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவடைந்துள்ளது.
ஏவுகணைகளின் இருப்பு வேகமாகச் சரிந்து வருவதால், வரும் நாட்களில் எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கப் படைகள் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏவுகணைகளைச் சேமிக்கும் நோக்கில், இலக்கை நோக்கி வரும் எதிரி ஏவுகணைகள் மீது வழக்கம் போல 2 அல்லது 3 தடுப்பு ஏவுகணைகளை ஏவுவதற்குப் பதிலாகக் குறைந்த அளவிலான ஏவுகணைகளையே ஏவ வேண்டிய நிர்பந்தம் அமெரிக்கப் படைகளுக்கு உருவாகியுள்ளது.
இந்த ஏவுகணைப் பற்றாக்குறை உக்ரைன் போன்ற பிற கூட்டாளி நாடுகளுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளையும் நேரடியாகப் பாதித்துள்ளதுடன், சீனாவிற்கு எதிரான எதிர்காலப் பாதுகாப்புத் தயார்நிலையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. குறையும் இருப்பை உடனடியாக ஈடுசெய்ய அமெரிக்கப் பென்டகன் $67 பில்லியன் கூடுதல் நிதியைக் கோரியுள்ள போதிலும், இந்த அதிநவீன ஏவுகணைகளை மீண்டும் தயாரித்து இருப்பு வைக்கக் குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் பெருங்கவலை உருவாகியுள்ளது.