Posted in

ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு, பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்குத் தொடர் துரோகம் இழைத்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், “விவசாய விரோத கால்ஷீட் அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தவெக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50,000 மற்றும் ரூ.75,000 வரை மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிபந்தனைகளுடன் கூடிய அரைகுறை அறிவிப்பை வெளியிட்டு லட்சக்கணக்கான விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்திலும் தவெக அரசு கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் மெத்தனப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது. மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு அறிவித்து வரும் சூழலில், தமிழக முதலமைச்சர் வாய்மூடி மௌனமாக இருப்பது டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்து வரும் தவெக ஆட்சியாளர்களின் இந்தச் செயல்பாடுகளைக் கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்ச மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சையில் கூடி விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடி, இந்த அரசுக்குச் சம்மட்டி அடி கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.