காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் கர்நாடகா செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை; அங்கு சென்று காவிரித் தண்ணீரைத் தூக்கிக்கொண்டா வரப்போறீங்க?” என்று அவர் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி தமிழ்நாட்டிற்கான உரிய நீரைப் பெறச் சட்டப் போராட்டங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அழுத்தம் கொடுப்பதே முறையான வழிமுறையாகும். அதை விடுத்து, இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில் கர்நாடகாவுக்கு நேரில் செல்வது தமிழ்நாட்டின் பல தசாப்தகால சட்டப்பூர்வ உரிமைகளைச் சிதைக்கும் செயலாகும் என்று அரசியல் தலைவர்களும் விவசாய அமைப்புகளும் எச்சரித்து வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், “கடந்த கால வரலாறுகளில் கர்நாடக அரசுடன் நடத்தப்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்தது இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத கர்நாடக ஆட்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் ஹெலிகாப்டரில் வந்து அணை நிலவரத்தைப் பார்க்கச் சொல்வது பேச்சுவார்த்தையைத் திசைதிருப்பும் தந்திரமே தவிர வேறில்லை” எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாகக் கர்நாடக அரசு விரிக்கும் சதிவலையில் முதலமைச்சர் விஜய் விழக் கூடாது என்றும், உடனடியாக இந்த பெங்களூரு பயணத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதே தற்போதைய தேவை எனச் சிபிஎம் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.