Posted in

காசாவில் கோர விபத்து – குண்டுவீச்சில் சிதைந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 20 பேர் பலி; 100 பேர் இடிபாடுகளில் சிா்க்கும் சோகம்!

இஸ்ரேலியப் படைகளின் தொடர் குண்டுவீச்சுகளால் ஏற்கனவே பலத்த சேதமடைந்திருந்த காசா சிட்டியின் ‘தல் அல்-ஹவா’ (Tal al-Hawa) பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென தரைமட்டமாக இடிந்து விழுந்தது. மக்கள் இரவில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் 70 முதல் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், காசா உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரும் ஐநா நிவாரணக் குழுவினரும் இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், மீட்புக் குழுவினரும் உள்ளூர் மக்களும் வெறும் கைகளாலேயே இடிபாடுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். “இடிபாடுகளுக்குள் இருந்து இப்போதும் மக்களின் அலறல் சத்தங்கள் கேட்கின்றன; எனவே உயிர்களை மீட்கத் தொடர்ந்து போராடி வருகிறோம்” என மீட்புப் படை அதிகாரி ராயித் அல்-தஹ்ஷான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

போரினால் வீடுகளை இழந்த சுமார் 10 குடும்பங்கள், பாதுகாப்பான தங்குமிடம் இல்லாத காரணத்தினால் இந்த பலவீனமான கட்டிடத்தில் தஞ்சமடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. போர்க்காலத்தில் பலத்த சேதமடைந்த சுமார் 2,000 கட்டிடங்களில் இப்போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கி வாழ்ந்து வருவதாகவும், மழை மற்றும் குளிர் காலம் நெருங்கி வரும் வேளையில் மேலும் 400 கட்டிடங்கள் உடனடியாக இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் ஐநா வளர்ச்சித் திட்ட (UNDP) அதிகாரி அலெசாண்ட்ரோ மிராகிக் எச்சரித்துள்ளார்.

சேதமடைந்த இடிபாடுகளை அகற்றுவதற்கான கனரக இயந்திரங்களை காசாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் முட்டுக்கட்டை போட்டு வருவதே மீட்புப் பணிகள் தாமதமாவதற்குக் காரணம் என பாலஸ்தீன மற்றும் ஐநா அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் காசா மக்களுக்கு இந்த இடிபாடு விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.