Posted in

கர்நாடகாவைச் சேர்ந்த 7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி; வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் பயிலும் 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அனைத்துக் கல்லூரிகளிலும் எச்.ஐ.வி பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவிய செய்தி அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்றும், அதிகாரப்பூர்வ தரவுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வதந்தியாகப் பரப்பப்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் (KSAPS) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள கேஎஸ்ஏபிஎஸ் திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா (IAS), “எங்கள் அமைப்பில் மாணவர்கள், குடும்பத் தலைவிகள் அல்லது குறிப்பிட்ட தொழிலாளர்கள் எனப் பிரித்து எச்.ஐ.வி தரவுகள் பராமரிக்கப்படுவதில்லை. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பிரிவில் இதுவரை சிகிச்சை பெற்று வரும் ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து, 7,000 கல்லூரி மாணவர்களுக்குத் தொற்று இருப்பதாகச் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை உருவாக்கிய இந்தச் செய்தியில் உண்மை இல்லை என அவர் மறுத்துள்ளார்.

2017-ஆம் ஆண்டின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி, இந்தியாவில் எவருக்கும் எச்.ஐ.வி பரிசோதனையைக் கட்டாயமாக்க முடியாது என்றும், நபர் ஒருவரின் சுயவிருப்பத்தின் பேரிலேயே பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘MAS’ (Mobilization for AIDS Suraksha) என்ற 8 மாத ரெட் ரிப்பன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மட்டுமே அரசு நடத்தி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் ‘Break Free’ மொபைல் செயலி அல்லது QR கோடு வாயிலாகத் தங்களின் ஆபத்து காரணியைச் சுயமாகக் கண்டறிந்து, தேவைப்பட்டால் தன்னார்வமாகப் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கர்நாடகாவில் சுமார் 54,000-க்கும் மேற்பட்டோர் தங்களுக்குத் தொற்று இருப்பதை அறியாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதால், இளைய தலைமுறையினரிடையே பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை ஊக்குவிக்கவே கல்லூரிகளில் சுகாதார முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் சரிபார்க்கப்படாத வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேஎஸ்ஏபிஎஸ் எச்சரித்துள்ளது.