Posted in

விஜய் சேதுபதி பொதுவா சொன்னார்.. தவெகவுக்கு ஏன் மூக்கு வேர்க்குது? – சீமான் அதிரடி பங்கம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் மற்றும் அதிகாரம் குறித்துப் பொதுவாகப் பேசிய நடிகர் விஜய் சேதுபதியை, தவெக தலைவர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகக் கருதிச் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு (தவெக) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்க இடையே நடந்த விளையாட்டுச் சூழலை வைத்துத் தலைமைப் பண்பு குறித்துத் தம்பி விஜய் சேதுபதி பொதுவான சில கருத்துகளையே பகிர்ந்துகொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் எந்தவொரு தனிநபரின் பெயரையோ அல்லது எந்த அரசியல் கட்சியையோ சுட்டிக்காட்டாத போது, தவெகவினர் தாங்களாகவே தங்களது தலைவருக்கு எதிராகப் பேசியதாகப் பொருள் கற்பித்துக்கொண்டு, கருத்து சொன்னவரையே தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் இழிவுபடுத்துவதும் அப்பட்டமான பாசிசம் என்றும் சகிப்புத்தன்மையற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள சீமான், “தலைமைத்துவம் குறித்த ஒரு பொதுவான கருத்தே உங்களை இவ்வளவு தூரம் ஆத்திரப்படுத்துகிறது என்றால், ஜனநாயகக் களத்தில் நாளைய தினம் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் மேடைகளில் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்களது அரசியல் நாகரிகமும் ஜனநாயக மாண்புமா?” எனக் காட்டமாகக் கேட்டுள்ளார். தனக்குப் பிடித்தமான கருத்துக்களை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரமே தவிர ஜனநாயகமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனநாயகன் என்று வெறும் படம் எடுத்தால் மட்டும் போதாது; உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்” என விஜய் தரப்பை மறைமுகமாகப் பங்கம் செய்துள்ள சீமான், மாற்றுக் கருத்துக்களைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர வசைபாடி முடக்கப் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஆதரவாகச் சீமான் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தமிழக அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.