அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ஈரானுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்துள்ளதுடன், அமெரிக்காவுடன் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானிய இலக்குகள் மீது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகக் கொடூரமானத் தாக்குதலை நடத்தத் தயாராக இருந்ததாகவும், ஆனால் ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்றுத் தாக்குதலைக் கைவிட்டதாகவும் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வது மற்றும் ஈரானின் அணுசக்தி விவகாரம் தொடர்பாக விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmail Baghaei) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை; தூதுக்குழுக்களை அனுப்பவோ அல்லது அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார். மேலும், தங்களது ஒரே பேச்சுவார்த்தை ஓமன் நாட்டுடன் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அது ஹார்முஸ் நீரிணையில் தற்காலிகக் கப்பல் பாதையை அமைப்பது தொடர்பானது மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்பின் சமரசப் பேச்சுவார்த்தை அறிவிப்பால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது ஒரே நாளில் 5% முதல் 6% வரை சரிவைக் கண்டது. ஆனால், பேச்சுவார்த்தை என்ற டிரம்பின் தகவலை ஈரான் மறுத்துள்ளதால், மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலும் வர்த்தகப் பாதைகளின் மீதான நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணியப்போவதில்லை என்பதில் ஈரான் தீவிரமாக இருப்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.