Posted in

பாஜகவின் 30 ஆண்டு கோட்டையைத் தகர்த்த பிரசாந்த் கிஷோர்! – எக்ஸ் தளத்தில் வாழ்த்திய ஸ்டாலின்!

இந்திய அரசியலின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து ‘ஜன் சூராஜ்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தின் பாங்கிபூர் (Bankipur) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளாக பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த பாங்கிபூர் தொகுதியில் களம் கண்டு, அக்கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்துப் பிரசாந்த் கிஷோர் படைத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் தேசிய தலைவராகவும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நிதின் நவீன், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பாங்கிபூர் தொகுதி காலியானது. இந்த இடைத்தேர்தலைத் தனது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியப் பரீட்சையாக எடுத்துக்கொண்ட பிரசாந்த் கிஷோர், பாங்கிபூரின் மூலை முடுக்கெல்லாம் வீதி வீதியாகச் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவுகளில் ஜன் சூராஜ் கட்சி பாஜகவைக் வீழ்த்தி தனது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து கணக்கைத் தொடங்கியுள்ளது.

பிரசாந்த் கிஷோரின் இந்த அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “திரைக்குப் பின்னால் இருந்து வியூகங்கள் அமைத்தவர், தற்போது மக்கள் மன்றத்தில் நேரடியாக நின்று மகத்தான வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது” எனப் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பீகார் மக்களின் நலனுக்காகவும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மாநில வளர்ச்சிக்காகவும் பிரசாந்த் கிஷோரின் பயணம் தொடர வாழ்த்தியுள்ளார்.

தேர்தல் வியூக அமைப்பாளராகப் பல கட்சிகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பிரசாந்த் கிஷோர், நேரடியாகத் தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்றிருப்பது ஜன் சூராஜ் தொண்டர்களிடையே பேர உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் பீகார் அரசியலில் மாற்றுச் சக்தியாக உருவெடுத்துள்ள ஜன் சூராஜ் கட்சி, இனிவரும் மாநில மற்றும் தேசிய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனப் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.