Posted in

தஞ்சையில் உச்சக்கட்ட பதற்றம்! கடைசி நேரத்தில் ரூட்டை மாற்றிய போலீஸ்: செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதியிடம் தீவிர விசாரணை!

தஞ்சாவூர்: காவிரி உரிமைப் போராட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருத்துகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை, காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாகத் தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை நகருக்குள் அழைத்துச் செல்லப்பட்டால் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் காவல்துறையினர் கடைசி நேரத்தில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்குக் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதேவேளையில் தவெக தொண்டர்களும் அங்கு திரண்டதால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் சூழல் உருவாகியது. இதன் காரணமாகத் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு வாகனப் பேரணியை காவல்துறையினர் உடனடியாகத் திருப்பினர்.

செங்கிப்பட்டி காவல் நிலையத்தை உதயநிதியின் வாகனம் வந்தடைந்ததும், அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு காவல் துறைக்கு எதிராகவும் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் (IG) முன்னிலையில், உதயநிதி ஸ்டாலினிடம் புகார் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்ற நிலையிலும் காவல் நிலையத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுச் செங்கிப்பட்டி பகுதியே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினைக் காவல் நிலையப் பிணையில் (Station Bail) இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைமுறைகள் முடிவடைந்ததும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுச் சென்னைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தஞ்சை மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.