Posted in

நாங்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை! – நெதன்யாகு அதிரடி முடிவு

டெல் அவிவ்: காசா முனையில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ‘அமைதி குழு’ (Board of Peace) தயாரித்த ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் குறைப்பு மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறும் வரைவுத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கீழே போடும் வரை காசாவில் தற்போது இஸ்ரேலிய ராணுவம் (IDF) கைப்பற்றியுள்ள எல்லைப் பகுதிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசிய நெதன்யாகு, “அமெரிக்க அதிபர் டிரம்பின் குழுவினர் ஹமாஸை ஆயுதக் குறைப்பு செய்ய வைத்துப் போரை முடிக்க முடியும் என நினைக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ஒரு வரைவு திட்டத்தை அனுப்பினார்கள்; ஆனால் அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அது எங்களது வரைவுத் திட்டம் இல்லை, எனவே எங்களது திருத்தங்கள் மற்றும் எதிர்ப்புக் கருத்துகளை அவர்களிடம் திருப்பி அனுப்பியுள்ளோம்” என்று தெளிவுபடுத்தினார்.

கடந்த வாரம் ஹமாஸ் இயக்கம் இந்த அமைதி திட்டத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இஸ்ரேல் இந்த வரைவுத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் பழைய ‘மஞ்சள் எல்லைக் கோட்டிற்கு’ (Yellow Line) ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அமைதி குழுவின் நிபந்தனையை ஏற்க மறுத்துள்ள நெதன்யாகு, இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக ராணுவம் எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முழு சுதந்திரம் கொண்டுள்ளது என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா, எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கொண்டுவரப்பட்ட இந்த வரைவுத் திட்டத்தில் இஸ்ரேல் திருத்தங்களைக் கோரியுள்ளதால், அமைதி குழுவின் தலைமைத் தூதர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும், இஸ்ரேலின் உறுதியான நிலைப்பாட்டினால் காசா பகுதியில் தற்காலிகப் போர்நிறுத்தம் மற்றும் அமைதி திரும்புவதில் மீண்டும் முட்டுக்கட்டை மற்றும் இழுபறி நிலை நீடிக்கிறது