சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்லாமல், அமைச்சர்கள் முன்ஜாமீன் வாங்குவது நகைச்சுவையாக உள்ளது” என்று சாடியுள்ளார். தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தம் மீது வீடுபுகுந்து மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை, பட்ஜெட்டில் மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே நடத்தப்பட்ட நாடகம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் காவிரி நீர் வரத்து மிகக் கடுமையாகக் குறைந்துள்ளது. மேகதாது அணையைக் கட்டத் துடிக்கும் கர்நாடகாவைத் தடுத்து நிறுத்த தவெக அரசுக்குத் தைரியமும் வக்கும் இல்லை. பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் 50,000, 75,000 என நிபந்தனைகளைப் போட்டு விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். விவசாயிகள் பிரச்சினையை திசைதிருப்பவே என் மீது பழிவாங்கும் கைது நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது” என்றார்.
மேலும், மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகச் சாடிய அவர், “கடந்த சில வாரங்களில் மட்டும் பல லாக்கப் மரணங்களும், சாதி ஆணவப் படுகொலைகளும் நடந்துள்ளன. 3.5 லட்சம் குடும்பங்களுக்கு வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமான மின் கட்டண (EB Bill) உயர்வு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கேட்ட ‘மாற்றம்’ இதுதானா? முந்தைய அரசின் திட்டங்களுக்குப் பெயர்களை மாற்றுவது மட்டும்தான் தவெக அரசு செய்த ஒரே மாற்றமாகும்” என எள்ளி நகையாடினார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களைக் கட்சி கோஷம் போட வைத்து ரீல்ஸ் வீடியோ எடுக்கும் அமைச்சர்களைக் கண்டித்த உதயநிதி, “திமுக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களைத் டார்கெட் செய்து கைது நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதிலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின் கட்டணம், காவிரி பிரச்சனை குறித்து திமுக உறுதியாகவும் ஆணித்தரமாகவும் கேள்விகளை எழுப்பும்; அதற்குப் பதில் சொல்ல அரசு தயாராக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்தார்.