Posted in

“ரூ.140-க்கு உடலை விற்கிறேன்?” – போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகளின் அதிர்ச்சி குமுறல்!

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவிகள் மீது சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரமான இணையவழி துன்புறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் அவதூறுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தங்களுக்கு எதிராகப் பரப்பப்படும் கொச்சையான விமர்சனங்கள், மிரட்டல்கள் மற்றும் காவல்துறையின் அலட்சியம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துத் தங்களது வேதனையைப் பகிர்ந்து கொண்டனர்.
மும்பையைச் சேர்ந்த ரியா ஆஹிர் என்ற மாணவி தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகையில், மத்திய மும்பையின் சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தின் போது 20 மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கத் தான் காவல் வாகனத்தின் முன் நின்றதாகக் குறிப்பிட்டார். அதற்காகத் தன்னைக் குறிவைத்து இணையவாசிகள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தொண்டர்களும் “ரூ.140-க்கு உடலை விற்கிறார்” என்பது போன்ற அருவருக்கத்தக்கக் கொச்சையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகக் கூறி வேதனை தெரிவித்தார்.
மேலும், இத்தகைய இணையவழி மிரட்டல்கள் வெறும் ட்ரோலிங் (Trolling) அல்ல, அது ஒரு கடுமையான குற்றம் என்றும், கடந்த ஜூலை 27 அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படாமல் காவல்துறை பாராமுகமாக இருப்பதாக அம்மாணவி குற்றம் சாட்டினார். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் விவரித்தனர்.
மாணவிகளின் குமுறல்களைக் கேட்டறிந்த ராகுல் காந்தி, நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடும் பெண்களை இணையத்தில் அவதூறு செய்து முடக்குவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் எனச் சுட்டிக்காட்டினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குத் தேவையான சட்ட மற்றும் பாதுகாப்பு உதவிகளைச் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இணையவழிச் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Keywords: