பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் நேற்று இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் பங்குச்சந்தை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, தனியார் தொலைக்காட்சி முன்னாள் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பி.ஆர். சுந்தர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்தார். வேலைவாய்ப்பு தொடர்பாக அணுகியபோது பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், பின்னர் அலுவலகத்தில் வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த பி.ஆர். சுந்தரைச் சென்னை தனிப்படை காவல்துறையினர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வைத்து அதிரடியாகக் கைது செய்து, விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்காக நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். ஆனால், காவல்துறை தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி, பி.ஆர். சுந்தரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப் போதிய சட்டப்பூர்வ முகாந்திரம் இல்லை எனக் கூறி காவலில் வைக்க மறுத்து, அவரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நேற்று இரவே பி.ஆர். சுந்தர் ஜாமீனில் வெளியே வந்தார். அதேவேளையில், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கத்துடன் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும், சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொண்டு உண்மைய நிரூபிப்பேன் என்றும் பி.ஆர். சுந்தர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். கைதான ஒரே நாளில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் இப் புகாரில் அடுத்தகட்ட திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.