செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இயற்கையில் இதுவரை கண்டறியப்படாத, முற்றிலும் புதிய மரபணு அமைப்பு கொண்ட வைரஸ்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். சயின்ஸ் (Science) ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள், மருத்துவ உலகில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படும் அதே வேளையில், “அடுத்த ஜாம்பி வைரஸ் உருவாக்கத்திற்கு இதுவே வழிவகுக்கும்” எனச் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆர்க் இன்ஸ்டிடியூட் (Arc Institute) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஈவோ 2’ (Evo 2) என்ற மேம்படுத்தப்பட்ட AI மாதிரியைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். லட்சக்கணக்கான மரபணுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, AI மூலமாக உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வைரஸ் மாதிரிகளில் 16 வைரஸ்கள், பாக்டீரியாக்களைத் தாக்கித் தங்களைத்தானே பெருக்கிக் கொள்ளும் திறன் கொண்டவையாக வெற்றி பெற்றுள்ளன.
இந்த ஆய்வில் உருவாக்கப்பட்டுள்ள ‘பாக்டீரியோபேஜ்’ (Bacteriophages) ரக வைரஸ்கள், இ.கோலை (E. coli) பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கும் தன்மை கொண்டவை. மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ அல்லது தாவரங்களுக்கோ எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் தகவல்கள் ஏதும் AI-க்கு வழங்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத அபாயகரமான பாக்டீரியா தொற்றுகளைக் குணப்படுத்த இந்த AI வைரஸ்கள் உதவும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயிருள்ள முழு வைரஸ் மரபணுவையே உருவாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் உயிரி-பாதுகாப்பு (Biosecurity) சார்ந்த கவலைகளை எழுப்பியுள்ளது. தவறான நபர்களின் கைகளில் இது கிடைத்தால் மனித குலத்திற்கு ஆபத்தான செயற்கை வைரஸ்கள் உருவாக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், “திரைப்படங்களில் வருவது போல இதுவே ஜாம்பி வைரஸ் பேரழிவின் தொடக்கம்” என இணையவாசிகள் பலர் இணையத்தில் தங்களது கவலைகளைப் பதிவிட்டு வருகின்றனர்.