Posted in

டிரம்ப் – ஜி ஜின்பிங் உச்சிமாநாட்டுக்கு முன் பரபரப்பு: சீன மாணவர்களின் விசா மீது கெடுபிடி காட்டுமா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான வாஷிங்டன் உச்சிமாநாடு நெருங்கி வரும் சூழலில், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் சீன மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் சீன அரச இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. உளவு நடவடிக்கை அச்சம் மற்றும் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி இக்கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பத் துறைகளில் பயிலும் சீன மாணவர்கள் மூலம் ரகசியத் தகவல்கள் சீனாவுக்குச் சோரம்போவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமைகள் எச்சரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவுகளில் பயிலும் சீன மாணவர்களுக்கான விசா பரிசீலனை முறைகளைக் கடுமையாக்கவும், அவர்களின் பின்னணியைத் தீவிரமாக ஆய்வு செய்யவும் டிரம்ப் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.

அமெரிக்கக் கல்வித் துறையில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான சீன மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இக்கட்டுப்பாடுகள் தங்களின் வருவாயையும் சர்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பையும் கடுமையாகப் பாதிக்கும் எனப் ஹார்வர்ட், எம்ஐடி உள்ளிட்ட அமெரிக்க முன்னணி பல்கலைக்கழகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. ஆண்டுதோறும் பில்லியன் கணக்கிலான டாலர்களை அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பாக அளிக்கும் சீன மாணவர்களின் சேர்க்கை குறைந்தால், உயர்கல்வித் துறை பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் நடைபெறவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங் உச்சிமாநாட்டில், வர்த்தகப் போர் மற்றும் உளவு குற்றச்சாட்டுகளுடன் சேர்ந்து இந்த சீன மாணவர் விசா விவகாரமும் முக்கிய விவாதப்பொருளாக மாறவுள்ளது. சீன மாணவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனப் பெய்ஜிங் அரசு வலியுறுத்தி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பில் எவ்வித விட்டுக் கொடுப்பும் இருக்காது என்ற டிரம்பின் நிலைப்பாடு அமெரிக்க-சீன உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.